புதுடெல்லி: பிரிட்டன் கடற்படைக்கு சொந்தமான எப்-35பி ரக விமானம் கடற்பரப்பில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 19 நாட்களுக்கு முன்பு அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அதி நவீன போர் விமானமாக கருதப்படும் இது உலகின் மிகவும் அதிகபட்ச விலையுடைய விமானமாக கருதப்படுகிறது. ஒரு விமானத்தின் விலை 110 மில்லியன் டாலர். அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.924 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், எப்-35பி விமானத்தை பழுதுபார்க்கும் முயற்சிகள் தோல்வியடைந்து விட்டதையடுத்து அதனை சி-17 குளோப்மாஸ்டர் சரக்கு விமானம் மூலமாக மீண்டும் பிரிட்டனுக்கே கொண்டு செல்ல பரிசீலிக்கப்பட்டு வருகிறது. எப்-35பி விமானத்தை சரக்கு விமானத்தில் ஏற்ற வேண்டுமானால் அதற்கு லாக்ஹீட் மார்டினில் பயிற்சி பெற்ற பொறியாளர்கள் மட்டுமே அதனை செய்து முடிக்க முடியும்.
வகைப்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய போர் விமானம் பிரித்தெடுக்கப்படும்போது அதனை பிரிட்டிஷ் ராணுவம் உன்னிப்பாக கண்காணிக்கும். இறக்கைகள் அகற்றப்பட்டு சரக்கு விமானத்தில் ஏற்றப்பட வேண்டும். எப்-35பி போர் விமானம் ரேடார் தடுப்பான்களைக் கொண்டுள்ளது. இது செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு இணைவு, மறைகுறியாக்கப்பட்ட மென்பொருள் மற்றும் நவீன வான்வழிப் போருக்கான சென்சார்களுடன் பயன்படுத்தப்படுகிறது.
சுற்றுலா துறையின் தூதுவர்: இந்திய சுற்றுலா துறைக்கான எதிர்பாராத நட்சத்திரமாக பிரிட்டனின் எப்-35 பி போர் விமானம் மாறியுள்ளது. குறிப்பாக, கேரளாவின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் தென்னை, பனை மரங்கள் நிறைந்த கடற்கரைகள், கலாச்சாரம் ஆகியவற்றை சுற்றுலாப் பயணிகளிடம் ஊக்குவிக்கும் விளம்பர தூதுவராக தற்போது அந்த விமானம் மாறியுள்ளது.
தென்னை மரங்கள் சூழ தார்ச்சாலையில் நிறுத்தப்பட்டுள்ள போர் விமானத்தின் ஏஐ-யால் உருவாக்கப்பட்ட படத்தை கேரள சுற்றுலாத்துறை சமூக வலைதளத்தில் பதிவிட்டது. அந்த ஊடகப் பதிவில், பிரிட்டன் ஜெட் விமானம் கேரள மாநிலத்திற்கு ஐந்து தங்க நட்சத்திரங்களை வழங்கி, அதை ‘‘ஒரு அற்புதமான இடம். அதனால்தான் நான் வெளியேற விரும்பவில்லை. நிச்சயமாக இதை உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்,’’ என்று ஜெட் விமானம் கூறுவதுபோல் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.