திருவனந்தபுரம்: கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளாவின் எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 9 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்சு எச்சரிக்கை’ விடுத்துள்ளது. கேரளாவின் மீதமுள்ள 5 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு எச்சரிக்கை என்பது 11 முதல் 20 செ.மீ வரை மிக கனமழைக்கான எச்சரிக்கை என்றும், மஞ்சள் எச்சரிக்கை என்பது 6 முதல் 11 செ.மீ வரையிலான கனமழைக்கான எச்சரிக்கை என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
கேரளாவின் பல பகுதிகளில் இன்று இடைவிடாது கனமழை பெய்ததால் ஆறுகள் மற்றும் அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து, தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியது. பாலக்காட்டில், பல்வேறு அணைகளில் நீர் மட்டம் உயர்ந்ததால், உபரி நீரை வெளியேற்ற அணையின் மதகுகள் திறக்கப்பட்டன. பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலப்புழா, மங்கலம், சிறுவாணி, மீன்கரா மற்றும் போத்துண்டி ஆகிய அணைகளில் மதகுகள் திறக்கப்பட்டுள்ளன.
பத்தனம்திட்டா மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் மணிமாலா மற்றும் மொக்ரல் ஆறுகளில் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்ததால், அப்பகுதி மக்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆறுகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லத் தயாராக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.