திருவனந்தபுரம்: கேரளாவின் கோழிக்கோடு, காசர்கோடு, கண்ணூர் மற்றும் வயநாடு ஆகிய 4 மாவட்டங்களுக்கும் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
கடந்த சில நாட்களாக மத்திய மற்றும் வடக்கு கேரளாவின் சில பகுதிகளில் பெய்து வரும் கனமழை, இன்னும் சில நாட்களுக்கு தொடர வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஜூலை 15 முதல் வடக்கு கேரளாவில் பெய்துவரும் பலத்த கனமழையானது, அந்த மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் காசர்கோடின் ஹோஸ்துர்க்கில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 18 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து கண்ணூரில் உள்ள இரிக்கூர், செருவாஞ்சேரி மற்றும் பெரிங்கோம் ஆகிய இடங்களில் தலா 17 செ.மீ மழை பெய்துள்ளது. கண்ணூரில் உள்ள தலிபரம்பாவில் 16 செ.மீ மழை மற்றும் காசர்கோட்டில் உள்ள குடுலு, படன்னக்காடு மற்றும் பயார் ஆகிய இடங்களில் தலா 15 செ.மீ மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்திய வானிலை ஆய்வு மையம், அடுத்த 24 மணி நேரத்தில் காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுத்துள்ளது. அதேபோல, மலப்புரம், இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. மேலும், திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் ஆலப்புழா தவிர, கேரளாவின் பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் நாளை (ஜூலை 18) மழை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நாளை வடக்கு கேரளாவில் உள்ள காசர்கோடு, கண்ணூர் மற்றும் வயநாடு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் இடுக்கி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.