திருவனந்தபுரம்: கேரளாவில் நாளை தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளதாலும், புதன்கிழமை பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாலும் இரண்டு நாட்களும் போக்குவரத்து பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள தனியார் பேருந்து உரிமையாளர்களின் கூட்டுக் குழு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பேருந்து உரிமையாளர்களின் பிரதிநிதிகளுக்கும் போக்குவரத்து ஆணையருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், திட்டமிடப்பட்டபடி செவ்வாய்க்கிழமை மாநிலம் தழுவிய அடையாள வேலைநிறுத்தம் நடைபெறும் என தனியார் பேருந்து உரிமையாளர்களின் கூட்டுக் குழு அறிவித்துள்ளது. இதனால், கேரளாவில் நாளை தனியார் பேருந்துகள் இயங்காது என்றும், தங்கள் கோரிக்கைகளை அரசாங்கம் தீர்க்கத் தவறினால் ஜூலை 22 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் தனியார் பேருந்து உரிமையாளர்களின் கூட்டுக் குழு தெரிவித்துள்ளது.
முக்கிய கோரிக்கைகள்: காலாவதியான பெர்மிட்களை தாமதமின்றி புதுப்பிக்க வேண்டும், குறிப்பிட்ட சில நிறுத்தங்களில் மட்டுமே நிற்கக்கூடிய பேருந்துகளை சாதாரண பேருந்துகளைப் போல் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று சொல்லும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும், மாணவர்களுக்கான கட்டணச் சலுகை விகிதங்களை திருத்த வேண்டும், காவல் துறையிடம் பேருந்து தொழிலாளர்கள் அனுமதிச் சான்றிதழ் பெற வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பேருந்து உரிமையாளர்கள் முன்வைத்து வருகின்றனர்.
புதன்கிழமை நாடு தழுவிய வேலை நிறுத்தம்: இதனிடையே, 17 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஜூலை 9 -ம் தேதி 10 மத்திய தொழிற்சங்கங்கள் 24 மணி நேர தேசிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனால், 10-ம் தேதி அன்று கேரளாவில் பொது போக்குவரத்து இயல்பாக இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்குமாறும், வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்யுமாறும் கேரளாவில் உள்ள தொழிற்சங்கங்களின் மாநில அளவிலான கூட்டுக் குழு, மாநிலத்தில் உள்ள பொதுமக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் வேண்டுகோள் விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.