திருவனந்தபுரம்: கேரளாவை அச்சுறுத்தும் ஆபத்தான மூளையை தின்னும் அமீபா நோய் எனப்படும் அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. இப்போது திருவனந்தபுரத்தில் 17 வயது சிறுவனுக்கு இந்த தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தை சேர்ந்த சிறுவனுக்கு மூளையை தின்னும் அமீபா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், சுகாதாரத் துறை அக்குளம் எனும் சுற்றுலா கிராமத்தில் உள்ள நீச்சல் குளத்தை மூடினர். மேலும், அந்த நீச்சல் குளத்திலிருந்து சோதனைக்காக நீர் மாதிரிகளை சேகரித்தனர். அந்தச் சிறுவன் முந்தைய நாள் நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் குளித்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
செப்டம்பர் 14 அன்று சுகாதாரத்துறை வலைத்தளத்தில் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இந்த ஆண்டு கேரளாவில் இதுவரை 67 அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர், மேலும், இந்த பாதிப்பால் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து பேசிய கேரளா சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறும்போது, “அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸை எதிர்த்துப் போராட கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் அவசியம். மேலும் நீர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இந்த நோய்க்கு எதிராக நாம் வலுவான பாதுகாப்பை உருவாக்க வேண்டும். கால்நடைகளை குளிப்பாட்டும் நீர்நிலைகள் உட்பட, தேங்கி நிற்கும் அல்லது மாசுபட்ட நீரில் நம் முகத்தை கழுவவோ அல்லது குளிக்கவோ கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். கிணறுகள் அறிவியல் ரீதியாக குளோரினேட் செய்யப்பட வேண்டும். நீர் பூங்காக்களில் உள்ள நீச்சல் குளங்களும் முறையாக குளோரினேட் செய்யப்பட வேண்டும்.
பராமரிப்பு தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும். வீடுகளில் உள்ள நீர் சேமிப்பு தொட்டிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இந்த வகை அமீபா உங்கள் மூக்கு வழியாக மூளைக்குள் நுழைகிறது. எனவே தண்ணீர் உங்கள் மூக்கில் நுழையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று அவர் கூறினார்.