ஷில்லாங்: கணவனை மனைவி கொன்ற வழக்கில், கொலைச் சம்பவத்தை அரங்கேற்றியது எப்படி என்று போலீஸார் முன்பு கூலிப்படையினர் நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் சோனம்(25). இவரது கணவர் ராஜா ரகுவன்ஷியை(28). இருவரும் தேனிலவு கொண்டாட அண்மையில் மேகாலயாவுக்கு சென்றிருந்தனர். தேனிலவுக்கு அழைத்து செல்வது போல சென்று கணவர் ராஜா ரகுவன்ஷியை, அவரது மனைவி சோனம் கூலிப்படை ஏவி கொலை செய்தார். அவரது காதலன் ராஜ் குஷ்வாகாவும் இதற்கு உடந்தையாக இருந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தொழில் அதிபரின் மகளான சோனம், மணமகன் ராஜா ரகுவன்ஷி ஆகியோரின் கடந்த மே 11-ம் தேதிதான் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு முன்பு சோனத்துக்கு, தனது தந்தையின் நிறுவனத்தில் பணியாற்றிய, ராஜ் குஷ்வாகாவுடன் காதல் மலர்ந்துள்ளது. ஆனால் குடும்பத்தினர் கட்டாயப்படுத்தியதால் வேறு வழியின்றி ராஜா ரகுவன்ஷியை, சோனம் திருமணம் செய்தார். ஆனால், அவருடன் வாழ்வதற்கு பிடிக்கவில்லை.
இதனால் காதலன் ராஜ் குஷ்வாகாவுடன் சேர்ந்து தனது கணவரை கொல்ல சதித்திட்டம் தீட்டி உள்ளார். அதன்படி கணவர் ராஜா ரகுவன்ஷியை மேகாலயாவுக்கு தேனிலவுக்கு அழைத்து சென்ற சோனம் அங்கு காதலனுடன், இணைந்து ராஜாவை சோனம் கொலை செய்ய முடிவு செய்தார்.
மேகாலயாவின் பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்த ராஜா, சோனம் தம்பதி, அங்குள்ள நொங்ரியாட் என்ற கிராமத்தில் தங்கியிருந்தனர். இந்நிலையில், 23-ம் தேதிக்கு பிறகு இருவரும் தங்கள் உறவினர்களை தொடர்பு கொண்டு பேசவில்லை. அவர்களின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனால், சந்தேகமடைந்த ராஜா ரகுவன்ஷி குடும்பத்தினர் மத்திய பிரதேச போலீஸில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். இந்நிலையில் சோனம், ராஜா தம்பதி கடைசியாக தங்கிய கிராமத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளத்தாக்கில், கடந்த 2-ம் தேதி ராஜாவின் சடலத்தை போலீஸார் கண்டெடுத்தனர்.
இதைத் தொடர்ந்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி சோனம், ராஜ் குஷ்வாகா, கூலிப்படையைச் சேர்ந்த ஆகாஷ் (19), விஷால் (22), ஆனந்த் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கூலிப்படைக்கு ரூ.20 லட்சம் தருவதாக சோனம் வாக்குறுதி கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து முன்பணமாக ரூ.4 லட்சத்தையும் வழங்கி உள்ளார். இந்நிலையில் கொலை செய்தது எப்படி என்பதை கூலிப்படையினர் போலீஸார் முன் நடித்துக் காட்டவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை போலீஸார் செய்துள்ளனர். சோனம் உள்ளிட்டோரை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று நடித்துக் காட்டுவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். அதன் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
சதித்திட்டம்: இந்நிலையில், கொலை செய்யப்பட்ட ராஜா ரகுவன்ஷியின் அண்ணன் விபின் ரகுவன்ஷி, இந்த சம்பவம் தொடர்பாக புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறும்போது, “திருமணத்திற்கு முன்பே சோனம் தனது தாயிடம் ராஜ் என்ற நபரை காதலிப்பது குறித்து தெரிவித்துள்ளார். ஆனால் சோனம் வீட்டார் அதை எங்களிடம் மறைத்துவிட்டனர்.
ஒரே சமூகத்துக்குள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி சோனத்தை ராஜாவுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். அதன் பின்னர் சோனம், சதித்திட்டம் தீட்டி கொலை செய்துள்ளார்” என்றார்.
சோனம்தான் கொலை செய்தார்: இதுகுறித்து சோனமின் அண்ணன் கோவிந்த கூறும்போது, “இதுவரை கிடைத்த தடயங்களின்படி சோனம்தான் கொலை செய்தார் என்பது தெளிவாகிறது. அவர் எங்கள் வீட்டு பெண்ணே இல்லை. சோனத்துடன் எங்களுக்கு இருந்த உறவை முறித்துக் கொண்டோம்.
அவருக்கும், எங்களுக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை. அவர் குற்றம் செய்துள்ளார் என்பதே அவருக்குப் புரியவில்லை. நாங்கள் இனி ராஜா ரகுவன்ஷி சார்பாகவே பேசுவோம். அவர்கள் குடும்பத்துக்கு ஆதரவாக இருப்போம். கைது செய்யப்பட்டுள்ள ராஜ் குஷ்வாகா, சோனத்தை அக்கா..அக்கா என்றுதான் அழைப்பார். கடந்த 3 வருடங்களாக ராஜ் குஷ்வாகாவுக்கு ராக்கி கயிறை, சோனம் கட்டி வந்தார்” என்றார்.
ராஜ் குஷ்வாகாவின் தாயார் கூறும்போது, “எனது மகன் ராஜ், ஒரு அப்பாவி. இதுபோன்ற தவறுகளை அவன் செய்யமாட்டான். அவனுக்கு 20 வயதுதான் ஆகிறது. அவன் மீது தவறான குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது” என்றார்.