புதுடெல்லி: சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு பள்ளிக் குழந்தைகள் ராக்கி கயிறு கட்டினர். பின்னர் பள்ளி குழந்தைகளுடன் அவர் கலந்துரையாடினார். இதையடுத்து, பிரம்ம குமாரிகள் அமைப்பினரும் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து ராக்கி கயிறு கட்டினர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.
மத்திய அமைச்சர்கள் வாழ்த்து: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “சகோதர சகோதரிகளுக்கு இடையிலான அன்பு, நம்பிக்கை மற்றும் பாதுகாப்புக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் பிரிக்க முடியாத பிணைப்பை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு இதயம் கணிந்த வாழ்த்துகள்’’ என பதிவிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் பக்கத்தில், “ரக்ஷா பந்தன் விழாவுக்காக அனைவருக்கும் இதயம் கணிந்த வாழ்த்துகள். நமக்குள் இருக்கும் பாதுகாப்பு உணர்வை இந்த விழா மேலும் வலுப்படுத்த வேண்டும்’’ என பதிவிட்டுள்ளார்.