லக்னோ: குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான கோல்ட்ரிஃப் இருமல் சிரப்பை பயன்படுத்த உத்தரப் பிரதேச அரசு தடை விதித்துள்ளதாக அம்மாநில துணை முதல்வர் பிரஜேஷ் பதக் அறிவித்தார்.
உ.பி. அரசு கோல்ட்ரிஃப் இருமல் சிரப் விற்பனையைத் தடை செய்துள்ளதாகவும், இந்த வகை இருமல் சிரப்பை மக்கள் உட்கொள்ள வேண்டாம் என்றும் அம்மாநில துணை முதல்வர் பிரஜேஷ் பதக் அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ இருமல் சிரப்பை உட்கொண்ட பிறகு பல குழந்தைகள் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. எங்கள் அரசு இதுபோன்ற இருமல் சிரப்பை ஒருபோதும் வாங்கியதில்லை. இந்த வகை இருமல் சிரப்பை உட்கொள்ள வேண்டாம் என்று மாநில மக்களை வலியுறுத்தும் ஆலோசனையையும் நாங்கள் வெளியிட்டுள்ளோம். மேலும், உ.பி மாநிலத்தில் இருமல் சிரப்பை நாங்கள் தடை செய்துள்ளோம்” என்று கூறினார்.
தமிழ்நாட்டில் ஸ்ரீசன் பார்மாவால் தயாரிக்கப்படும் கோல்ட்ரிஃப் இருமல் சிரப் என்ற சிரப்பில் அனுமதிக்கப்பட்ட வரம்புகளை விட அதிகமாக டைதிலீன் கிளைகோல் (DEG) இருப்பதாக சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியதை அடுத்து இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. டைதிலீன் கிளைகோல் என்பது தொழில்துறையில் பயன்படுத்தப்படும் ஒரு நச்சுப் பொருளாகும், இது சிறிய அளவில் உட்கொண்டாலும் ஆபத்தானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாராவில் இருமல் சிரப் உட்கொண்டதாகக் கூறப்படும் காரணத்தால் 14 குழந்தைகள் இறந்துள்ளதாகவும், எட்டு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முன்னதாக, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, உத்தரகண்ட், ராஜஸ்தான், தெலங்கானா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்கள் கோல்ட்ரிஃப் இருமல் சிரப்பை தடை செய்துள்ளன. மேலும், குழந்தைகளின் உயிரிழப்புகள் தொடர்பாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) பல்வேறு மாநிலங்களில் விசாரணையைத் தொடங்கியுள்ளது.