புதுடெல்லி: இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததன் பின்னணி குறித்து அன்றாடம் புதுப்புது ஊகங்கள் வெளியாகின்றன. அந்த வரிசையில், வெளியுறவு அமைச்சகம் அவருக்கு மிகக் குறைவான வெளிநாட்டுப் பயணங்களை ஒதுக்கியதாலும், அரசு ‘ப்ரோட்டோகால்’ ரீதியாக மரியாதைக் குறைபாடுகளால் ஏற்பட்ட அதிருப்தியின் விளைவாகவும் அவர் ராஜினாமா செய்திருக்கலாம் என்ற புதிய ஊகம் தற்போது வெளியாகியுள்ளது.
தனக்கு முன்பு குடியரசு துணைத் தலைவர் பதவிகளில் இருந்தவர்களுடன் ஒப்பிடுகையில் தான் ஓரங்கட்டப்படுவதாக, உரிய மரியாதை வழங்கப்படாததாக தன்கர் உணர்ந்தார் என்று இந்த புதிய ‘தியரி’ கூறுகிறது.
ஜெகதீப் தன்கர் 35 மாதங்கள் இப்பதிவியில் இருந்துள்ளார். ஆனால் 4 முறை மட்டுமே இருநாட்டு நல்லுறவு ரீதியாக அவர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார். இதனால் வெளியுறவு அமைச்சகத்துடன் அவருக்கு பிணக்கு ஏற்பட்டுள்ளது. வெளியுறவுக் கொள்கைகள் ரீதியாக ஓரங்கட்டப்பட்டதாக தன்கர் உணர்ந்துள்ளார். அவருக்கு முன்னதாக குடியரசு துணைத் தலைவராக இருந்த வெங்கயா நாயுடு 2017 முதல் 2022 வரை 17 முறை வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார், அதற்கு முன்னர் 2007 முதல் 2017 வரை அப்பதவியில் இருந்த ஹமீது அன்சாரி 28 முறை வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தன்கர் தனது பதவிக் காலத்தில் கம்போடியா, கத்தார், பிரிட்டன் மற்றும் ஈரானுக்கு மட்டுமே சென்றுள்ளார். அதேபோல் இந்தியா வரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் தன்னை வந்து சந்திப்பதும் குறைவாகவே இருந்தது என்பது அவரது குமுறலாக இருந்துள்ளது.
அதேபோ ஈரான் அதிபர் இப்ரஹிம் ரெய்ஸி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தபோது, அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள இந்தியா சார்பில் தன்கர் சென்றிருந்தார். அங்கே அவருக்கான ஏற்பாடுகள் குறித்து குடியரசு துணைத் தலைவர் அலுவலகம் கடும் அதிருப்தியைத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாது அரசு விழாக்கள் தொடர்பான மரபுகளைப் பின்பற்றப்படுவதிலும் தன்கர் ஒதுக்கப்பட்டதாக கருதுப்படுகிறது. அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் இந்தியா வந்தபோது ஏற்பாடு செய்யப்பட்ட அரசு விருந்து நிகழ்வில் தன்கருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. குடியரசு துணைத் தலைவருக்கு அந்த நிகழ்வு பற்றி எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அவருக்கு அழைப்பும் விடுக்கப்படவில்லை என்று அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கின்றது. குடியரசு துணைத் தலைவர் – அமெரிக்க துணை அதிபர் சந்திப்பு ஒருங்கிணைக்கப்படாதது பற்றி அப்போதே சந்தேகங்கள் எழுந்த நிலையில், இந்திய – அமெரிக்க அரசாங்க கட்டமைப்பில் உள்ள வேறுபாடுகள் காரணமாக அந்த சந்திப்பு மரபு ரீதியாக அவசியமானது அல்ல என்று தெரிவிக்கப்பட்டது.
டெல்லியில் கடந்த மே 19-ம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெகதீப் தன்கர், மரபு ரீதியாக கடைப்பிடிக்கப்படும் மரியாதை குறைபாடு குறித்து சுட்டிக் காட்டியிருந்தார். உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்க்கான ப்ரோடோகால் குறைபாடு குறித்து சுட்டிக்காட்டி நானும் அதே பிரச்சினையை எதிர்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.
அதேபோல், அரசு அலுவகங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி படங்களுடன் தனது படமும் வைக்கப்படவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியதாகத் தெரிகிறது. “நான் இப்பதவியில் இருந்து ஓய்வு பெறும்போது எனக்கு அடுத்து இப்பதவிக்கு வருபவர்களின் புகைப்படங்கள் அரசு அலுவலகங்களில் இருப்பதை உறுதி செய்வேன்.” என்று கூறியிருந்தார். கூடவே, “நான் சொல்லும் குறைகள், குற்றச்சாட்டுகள் எல்லாம் தனிப்பட்ட முறையிலானது அல்ல, நான் வகிக்கும் பதவி சார்ந்தது.” என்ற விளக்கமும் அளித்திருந்தார்.
மேலும் வாசிக்க>> ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமாவும், விடை தெரியாத சில கேள்விகளும்! – ஒரு பார்வை