புதுடெல்லி: இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன் வாக்காளர் பட்டியலில் சேர்ந்ததாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனு மீதான தீர்ப்பை டெல்லி நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு எதிராக டெல்லி ரோஸ் அவென்யூ மாவட்ட நீதிமன்றத்தில் விகாஸ் திரிபாதி என்பவர் தாக்கல் செய்த மனுவை டெல்லி மாவட்ட கூடுதல் தலைமை நீதிமன்ற நீதிபதி வைபவ் சவுராஸியா நேற்று விசாரித்தார்.
“சோனியா காந்தி கடந்த 1983-ம் ஆண்டு ஏப்ரலில் இந்திய குடியுரிமையை பெற்றுள்ளார். ஆனால் அவரது பெயர் டெல்லி சட்டப்பேரவை தொகுதி வாக்காளர் பட்டியலில் 1980-ம் ஆண்டே இடம்பெற்றுள்ளது. பின்னர் 1982-ம் நீக்கப்பட்டு, மீண்டும் 1983-ம் ஆண்டு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
1980-ம் ஆண்டே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்ததற்கு போலி ஆவணங்களை அளித்திருக்கக் கூடும் என்பதால் சோனியா காந்திக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இந்த மனு மீதான தீர்ப்பை நீதிபதி வைபவ் சவுராஸியா ஒத்தி வைத்தார்.