புதுடெல்லி: ஜெகதீப் தன்கரின் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில், குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தால் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் பலம் குறித்த விரைவுப் பார்வை இது.
மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போதிய பெரும்பான்மை உள்ளதால், தற்போது குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடந்தால் பாஜக வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தற்போது பாஜகவுக்கு மக்களவையில் 240 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 99 உறுப்பினர்களும் உள்ளனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் சேர்ந்து பாஜகவுக்கு ஆதரவாக 457 உறுப்பினர்கள் உள்ளனர்.
அதே நேரத்தில், இரு அவைகளிலும் மிகப் பெரிய எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் 99 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 27 உறுப்பினர்களும் உள்ளனர். இண்டியா கூட்டணி கட்சிகளும், பிற எதிர்க்கட்சிகளும் இணைந்து இரு அவைகளிலும் 300-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அதேபோல, பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் அணியில் இடம்பெறாத பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் பாரத் ராஷ்டிர சமிதி போன்ற கட்சிகளுக்கு மாநிலங்களவையில் 18 உறுப்பினர்கள் உள்ளனர்.
2017-ஆம் ஆண்டில் நடந்த குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தரப்பில் வெங்கையா நாயுடு மற்றும் எதிர்க்கட்சி வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்தி போட்டியிட்டனர். அப்போது வெங்கையா நாயுடு 272 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2022-ஆம் ஆண்டில் பாஜக தரப்பின் ஜெகதீப் தன்கர் மற்றும் எதிர்க்கட்சி வேட்பாளர் மார்க்ரெட் ஆல்வா இடையே போட்டி இருந்தது. அப்போது தன்கர் 346 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2022 தேர்தலின்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சி வாக்களிக்கவில்லை. அப்போது, ஆல்வாவின் வேட்புமனுவை அறிவிப்பதற்கு முன்பு காங்கிரஸ் தங்களிடம் ஆலோசிக்கவில்லை என்று தெரிவித்து அக்கட்சியின் 35 எம்.பிக்கள் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.