புதுடெல்லி: பாஜகவின் புதிய தேசியத் தலைவர் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்படுகிறது. இதன் பின்னணியில் செப்டம்பர் 9 இல் நடைபெறும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் காரணமாகி விட்டது.
பாஜகவின் தேசியத் தலைவராக மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா உள்ளார். இவரது பதவிக்காலம் முடிந்த பின்பும் 2024 மக்களவைத் தேர்தலுக்காக, அவரது பதவி காலம் முதன்முதலாக நீட்டிக்கப்பட்டது. பின்னர், டெல்லி மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் காரணமாக அது நீட்டிக்கப்பட்டது. அமைப்புத் தேர்தல்கள் முடிவடையாததால் புதிய தலைவர் தேர்தல் நடத்த முடியவில்லை.
இதையடுத்து சமீபத்தில், அமைப்புத் தேர்தல் பணிகள் நிறைவடைந்தன. அதன் பிறகும் தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியாத நிலை பாஜகவுக்கு ஏற்பட்டு விட்டது. இதன் பின்னணியில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே மாநிலங்களவை தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான ஜெகதீப் தன்கர் தன் பதவியை ராஜினாமா செய்தது காரணமாகி விட்டது.
தற்போது, தேர்தல் ஆணையத்தால் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி விட்டது. பாஜக வட்டாரங்களில் கிடைத்த தகவல்களின்படி, குடியரசு துணைத் தலைவர் தேர்தல் முடியும் வரை கட்சி தனது தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கையை நிறுத்தி வைத்துள்ளது.
எனினும், பாஜகவின் புதிய தேசியத் தலைவர் பதவிக்கு இதுவரையும் மத்திய அமைச்சர்களான தர்மேந்திர பிரதான், மனோகர் லால் கட்டார் ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் உள்ளன.
அதேசமயம், இதை விட முக்கியமாக மாநிலங்களவையின் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்வது பாஜக தலைமைக்கு முக்கியமாகி விட்டது. மாநிலங்களவையில் பாஜகவிற்கு 102 எம்பிக்களுடன் பெரும்பான்மை உள்ளது.
இருப்பினும் அக்கட்சி தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் உறுப்பினர்களுக்கும் ஏற்புள்ள வகையில் வேட்பாளரை தேர்வு செய்வது சவாலாகி உள்ளது. ஏனெனில், பல்வேறு எதிர்கட்சிகளின் சார்பிலான எம்.பிக்கள் மாநிலங்களவையில் உள்ளனர். இவர்களை சமாளித்து மாநிலங்களவையின் நடவடிக்கைகளை சீராக பிரச்சினையின்றி வைப்பது அரசுக்கு அவசியம்.
வரவிருக்கும் அக்டோபரில் பிஹார் சட்டப்பேரவைக்கு தேர்தல் வர உள்ளது. இதையடுத்து மேற்குவங்க மாநில சட்டப்பேரவை உள்ளிட்ட பல தேர்தல்கள் தொடர்ந்து வருகிறது. இத்துடன் 2027 இல் புதிய குடியரசுத் தலைவர் தேர்தலும் வந்து விடும். இதனிடையே மத்திய அமைச்சரவையிலும் மாற்றம் செய்து புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டி உள்ளது.
இவற்றின் மீதான முக்கிய முடிவுகளை எடுக்க, மிகவும் திறமையானவரை புதிய தேசிய தலைவராக அமரவைப்பது பாஜகவுக்கு அவசியம். மேலும், இப்பதவியில் அமர்பவர்கள், பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா ஆகியோருக்கு ஒத்துபோக வேண்டி இருக்கும். இதுபோன்ற காரணங்களால் தள்ளிப்போன தேர்தல் மீண்டும் ஒத்தி வைக்கப்படும் சூழலில் சிக்கியுள்ளது.