புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். அவர் 452 வாக்குகள் பெற்ற நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளை வசப்படுத்தினார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல், நாடாளுமன்ற வளாகத்தில் அறை எண் F-101, வசுதா, முதல் மாடி என்ற முகவரியில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி முதல் வாக்கை பதிவு செய்தார். 10 மணிக்கு முன்னதாகவே, நாடாளுமன்ற வளாகத்துக்கு வருகை தந்த அவர், தேர்தல் தொடங்கியதும் முதல் வாக்கை பதிவு செய்தார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஆகியோர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெ.பி. நட்டா, நிதின் கட்கரி, அஸ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான், கிரண் ரிஜிஜு, ராம் மோகன் நாயுடு, எல்.முருகன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஜெயராம் ரமேஷ் உள்ளிட்ட எம்பிக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
இதேபோல், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். அதிமுக எம்பிக்கள் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாக்களித்த நிலையில், திமுக, விடுதலைச் சிறுத்தைகள், சிபிஐ, சிபிஎம் கட்சிகளின் எம்பிக்கள் சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவாக வாக்களித்தனர். மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 98%-க்கும் அதிகமாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் 100% வாக்களித்துள்ளதாக ஜெயராம் ரமேஷ் தெரிவித்தார். எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 315 எம்பிக்களும் வாக்களித்ததாக அவர் கூறினார். ஆம் ஆத்மி கட்சி எம்பிக்கள் சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவாக வாக்களித்த நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மாலிவால், சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார். பிஜு ஜனதா தளம் எம்பிக்கள், தெலங்கானா ராஷ்ட்ர சமிதி எம்பிக்கள் உட்பட மொத்தம் 13 எம்பிக்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கவில்லை.
வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்ததை அடுத்து மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. வாக்கு எண்ணும் பணி தேர்தல் அதிகாரியான மாநிலங்களவை செயலர் பி.சி. மோடி-யின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றது. வாக்குகள் முழுவதுமாக எண்ணி முடிக்கப்பட்டதை அடுத்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்றுள்ளார். சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றுள்ளார். இதன் மூலம், சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் (68) கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர். ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்ட இவர் அனைவரிடமும் சுமுகமாக பழகக்கூடியவர். சர்ச்சைகளில் சிக்காதவர். கடந்த 1998 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றிபெற்று மக்களவைக்கு தேர்வானவர். மகாராஷ்டிர ஆளுநராக 2024 ஜூலை 31 முதல் பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக கொண்டாட்டம்: சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதை அடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சி.பி.ராதாகிருஷ்ணனின் சொந்த ஊரான திருப்பூரிலும் அவரது உறவினர்களும் ஆதரவாளர்களும் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்த ஜெகதீப் தன்கர் தனது உடல்நிலையை காரணம் காட்டி, கடந்த ஜூலை 21-ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, குடியரசு துணைத் தலைவர் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, குடியரசு துணைத் தலைவர் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம். போட்டி இருக்கும்பட்சத்தில் செப்டம்பர் 9-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) சார்பில் தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை அடுத்து, எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்த தேர்தலில் போட்டி உறுதியானது.
அதேநேரத்தில், இவ்விரு கூட்டணியிலும் இல்லாத ஒடிசாவின் பிஜூ ஜனதா தளமும், தெலங்கானாவின் பாரத் ராஷ்ட்ர சமிதியும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன. எனினும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜகன் மோகன் ரெட்டி தனது கட்சி எம்பிக்கள் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.