புவனேஸ்வர்: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பை புறக்கணிக்க ஒடிசாவின் முக்கிய எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக புவனேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிஜு ஜனதா தளம் (பிஜேடி) எம்பி சஸ்மித் பத்ரா, “குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பிஜேடி எம்பிக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற முடிவை கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் எடுத்துள்ளார். கட்சியின் மூத்த தலைவர்கள், கட்சியின் அரசியல் விவகாரக் குழு, எம்பிக்கள் ஆகியோருடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி ஆகிய இரண்டில் இருந்தும் சம தூரத்தில் விலகி இருப்பது என்ற கட்சியின் கொள்கைக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எங்களின் ஒட்டுமொத்த கவனமும் ஒடிசா மற்றும் 4.5 கோடி மக்களின் வளர்ச்சி குறித்தே இருக்கிறது” என தெரிவித்தார்.
பிஜேடி-யின் இந்த முடிவை பாஜக வரவேற்றுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜூவல் ஓரம், “குடியரசு துணைத் தலைவர் தேர்தலை புறக்கணிப்பதன் மூலம், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரை நவீன் பட்நாயக் மறைமுகமாக ஆதரித்துள்ளார். அவரது இந்த முடிவு சி.பி. ராதாகிருஷ்ணனின் வெற்றிக்கு உதவுவதாக அமையும்” என தெரிவித்தார். இதே கருத்தை, பாஜகவின் எம்பி பிரதீப் புரோஹித்தும் தெரிவித்துள்ளார். “தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரை நவீன் பட்நாயக் எதிர்க்கவில்லை” என பிரதீப் புரோஹித் தெரிவித்துள்ளார்.
பிஜேடி-யின் இந்த முடிவை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பக்த சரண் தாஸ், “வாக்களிப்பை புறக்கணிப்பதன் அர்த்தம், பாஜகவை ஆதரிப்பது என்பதே. காவி முகாமை பிஜேடி எதிர்க்கிறது என்பதை நிரூபிப்பதற்கான ஒரு வாய்ப்பாக இது இருந்தது. ஆனால், அந்த வாய்ப்பை அக்கட்சி தவறவிட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். கடந்த 2012 குடியரசு துணைத் தலைவர் தேர்தலையும் பிஜேடி புறக்கணித்தது என்பது குறிப்பிடத்தக்கது.