புதுடெல்லி: செப்டம்பர் 9 ஆம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக, செப்டம்பர் 8 ஆம் தேதி, தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரவு உணவு வழங்கவுள்ளார்.
இதுகுறித்து தேசிய ஜனநாயக கூட்டணி வட்டாரங்களில் இருந்து வெளியான தகவல்களின்படி, ‘ குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு முந்தைய நாள், தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி இரவு உணவு வழங்குவார். கூட்டணிக்குள் ஒற்றுமையை வலுப்படுத்துவதிலும், பிணைப்புகளை வளர்ப்பதிலும் இத்தகைய தொடர்புகள் எப்போதும் பலனளித்துள்ளன.
எங்கள் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் அனைத்து தேஜகூ கூட்டாளிகளின் முழு ஆதரவையும் பெற்றுள்ளார் என்ற போதிலும், வாக்களிப்பின் போது எம்.பி.க்களிடையே முழுமையான ஒருங்கிணைப்பு மற்றும் ஒற்றுமையை உறுதிப்படுத்த இந்த இரவு உணவு உதவும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி தனது வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணனை நிறுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் தெலங்கானாவைச் சேர்ந்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக முன்னிறுத்தியுள்ளன.
பலம் என்ன? – செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறவிருக்கும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்காக நாடாளுமன்றம் சார்பில் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மொத்தம் 782 எம்பிக்கள் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள். அவர்களில் 542 பேர் மக்களவையிலும், 240 மாநிலங்களவையிலும் உள்ளனர்.
தேர்தலில் வெற்றி பெற 392 எம்பிக்களின் வாக்குகள் தேவைப்படுகின்றன. மக்களவையில் மத்திய அரசுக்கு ஆதரவாக 293 எம்பிக்களும், 134 எம்பிக்கள் மாநிலங்களவையிலும் உள்ளனர். இவை மொத்தம் சேர்த்து மத்திய அரசிற்கு 427 எம்பிக்களின் ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது. எதிர்க்கட்சி எம்பிக்களில் 249 பேர் மக்களவையிலும், 106 பேர் மாநிலங்களவையிலும் என மொத்தம் 355 பேர் உள்ளனர்.