புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்புமனுத் தாக்கலின்போது அதிமுகவின் தம்பிதுரை உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பிக்களும் கலந்துகொண்டனர்.
யார் இந்த சிபிஆர்? – திருப்பூரைச் சேர்ந்த சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிராவின் ஆளுநராக 2024-ம் ஆண்டு ஜூலை 31 அன்று பதவியேற்றார். அதற்கு முன்பு, அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றினார்.
அக்டோபர் 20, 1957 அன்று பிறந்த ராதாகிருஷ்ணன், வணிக நிர்வாகத்தில் பட்டப்படிப்பு முடித்தவர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சுவயம்சேவகர் ஆக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1974-ம் ஆண்டு பாஜகவின் முன்னோடி அமைப்பான பாரதிய ஜனசங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றினார்.
1996-ம் ஆண்டில் தமிழக பாஜக செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 1998, 1999-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கோவையில் இருந்து இருமுறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2004 முதல் 2007-ம் ஆண்டு வரை தமிழக பாஜக தலைவராக பதவி வகித்தார். பாஜக தலைவராக இருந்த காலகட்டத்தில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை யாத்திரை மேற்கொண்டார்.
அரசியல் வாழ்க்கையை தாண்டி, ராதாகிருஷ்ணன் கல்லூரி காலத்தில் டேபிள் டென்னிஸில் சாம்பியனாகவும், ஓட்டப்பந்தய வீரராகவும் இருந்துள்ளார். கிரிக்கெட் மற்றும் கைப்பந்து அவருக்கு பிடித்தமான விளையாட்டுகள்.
கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரியில் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி முதல் மகாராஷ்டிர ஆளுநராக பதவி வகித்து வருகிறார். இந்தச் சூழலில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
இண்டியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி: குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து ஏகமனதாக அவரை தேர்வு செய்துள்ளன.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி இந்தியாவின் முற்போக்கான சட்ட வல்லுநர்களில் ஒருவர். தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ஆகுலமல்லாவரத்தில் 1946-ல் பிறந்த சுதர்சன் ரெட்டி, 1971-ல் ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை நிறைவு செய்தார். அதே ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி பார் கவுன்சிலில் பெயரை பதிவு செய்தார்.1995-ல் ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார். 2005-ல் குவாஹாட்டி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார். 2007 முதல் 2011 வரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தார். 2013-ல் கோவா மாநில லோக்யுக்தாவில் பணியாற்றினார். பின்னர், தனிப்பட்ட காரணங்களால் 7 மாதங்களில் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. இவர் நாளை 21-ம் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளார்.