புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் ராஜினமா ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, குடியரசு துணைத் தலைவர் தேர்தலை நடத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசியல் சாசன பிரிவு 324-ன்படி, குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலை நடத்தும் அதிகாரம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. எனவே, குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான செயல்முறை தொடங்கியுள்ளது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் எம்பிக்கள் அடங்கிய வாக்காளர் பட்டியலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. தேர்தல் அதிகாரி மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகளை இறுதி செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆயத்த நடவடிக்கைகள் முடிந்ததும், தேர்தல் அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் பதவியேற்றார். அவரது ஐந்தாண்டு பதவிக் காலம் 2027, ஆகஸ்ட் 10-ம் தேதி நிறைவடைய இருந்தது. இந்நிலையில், தன்கர் நேற்று முன்தினம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அவர் அனுப்பி வைத்தார்.
“உடல்நலனுக்கு முன்னுரிமை அளித்தும் மருத்துவ ஆலோசனைக்கு கட்டுப்பட்டும் அரசியலமைப்பு சட்டப் பிரிவு 67(ஏ) பிரிவின் கீழ் குடியரசு துணைத் தலைவர் பதவியை நான் உடனடியாக ராஜினாமா செய்கிறேன்” என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, தன்கரின் ராஜினமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.
குடியரசு துணைத் தலைவரே நாடாளுமன்ற மாநிலங்களவையின் தலைவர் ஆவார். இந்நிலையில், மாநிலங்களவை தலைவர் பதவியில் இருந்தும் தன்கர் விலகியுள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொங்கியிருக்கும் வேளையில் தன்கர் பதவி விலகியுள்ளது கவனிக்கத்தக்கது.