புதுடெல்லி: நடந்து முடிந்த குடியரசு துணைத் தலைவர் தேர்தலிலும் பாஜக வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம்.பியும், மக்களவையின் காங்கிரஸ் கொறடாவுமான மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டினார்.
நேற்று முன் தினம் நடந்த குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் 767 பேர் வாக்களித்தனர், இதில் 752 வாக்குகள் செல்லுபடியானவை. 15 வாக்குகள் செல்லாதவை. இதில் 452 வாக்குகள் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கும், 300 வாக்குகள் சுதர்சன் ரெட்டிக்கும் கிடைத்தன. இந்த தேர்தலில் 7 பிஜேடி எம்.பி.க்கள், 4 பிஆர்எஸ் எம்.பி.க்கள், 1 சிரோமணி அகாலி தளம் எம்.பி. மற்றும் 2 சுயேச்சை எம்.பி.க்கள் உட்பட 14 பேர் வாக்களிக்கவில்லை.
எதிர்க்கட்சிகள் கூட்டணி வேட்பாளரான சுதர்சன் ரெட்டிக்கு குறைந்தது 315 வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் 300 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர்களும் ஆலோசனைகளை தொடங்கியுள்ளனர். ஒரு மதிப்பீட்டின்படி, ஆறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களால் கட்சி மாறி வாக்களிப்பது அல்லது செல்லாத வாக்குகள் ஆக்கப்பட்டன.
“தேசிய ஜனநாயகக் கூட்டணி வாக்குகள் அவர்களின் பலத்தை விட எவ்வாறு அதிகரித்தன. எங்களுக்கு 300 வாக்குகள் மட்டுமே கிடைத்தது பற்றி நாங்கள் பகுப்பாய்வு செய்தோம். மூன்று சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) வாக்குகள், 4 ஆம் ஆத்மி கட்சி வாக்குகள், இரண்டு என்சிபி (சரத் பவார்) வாக்குகள் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஒன்று அல்லது இரண்டு வாக்குகள் பற்றி சந்தேகம் உள்ளது. இவர்கள் செல்லாத வாக்குகளை பதிவு செய்தார்களா அல்லது கட்சி மாறி வாக்களித்தார்களா எனத் தெரியவில்லை. அதேபோல காங்கிரஸின் ஒரு வாக்கு மற்றும் சமாஜ்வாதி கட்சியின் இரண்டு வாக்குகள் மீதும் சந்தேகம் உள்ளது” என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மக்களவை காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாகூர், “தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்ததற்காக இண்டியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்த் ஷிண்டே ஏன் நன்றி தெரிவிக்கிறார்?. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் “மனசாட்சி வாக்குகளை” அமைச்சர் கிரண் ரிஜிஜு ஏன் கொண்டாடுகிறார்?. இது உண்மையிலேயே மனசாட்சியா அல்லது சிபிஐ/அமலாக்கத் துறை அழுத்தம் மற்றும் குதிரை பேரம் மூலம் மனசாட்சியாக நியாயப்படுத்தப்படுகிறதா?
எதிர்க்கட்சிகளின் வாக்குகள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குச் சென்றதாக பாஜக தலைவர்களே ஒப்புக்கொண்டபோது, அது நாடாளுமன்றத்திற்குள் “வாக்கு திருட்டு” என்பதற்கான சான்றாக இல்லையா?.
கர்நாடகாவின் பெங்களூரு மத்திய தொகுதி முதல் இப்போது குடியரசு துணைத் தலைவர் தேர்தல்கள் வரை. மோடி- அமித்ஷா மாடல் வாக்கு திருட்டு மூலம் மட்டும்தான் வெற்றி பெறுகிறார்களா? மக்கள் ஆணையை மதிப்பதற்குப் பதிலாக வாக்குகளைத் திருடுவதாக அமைச்சர்கள் பெருமை பேசினால் ஜனநாயகம் நிலைக்குமா? அல்லது 2029 இல் பாஜகவின் வாக்குத் திருட்டு அரசியலுக்கு மக்கள் பதிலளிப்பார்களா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுபற்றி திரிணமூல் காங்கிரஸின் மாநிலங்களவை குழு தலைவர் டெரெக் ஓ’ பிரையன், “ஒரு சித்தாந்தப் போரில் எண்ணிக்கை முக்கியமில்லை. நான் உங்களுக்கு சில எண்களைத் தருகிறேன், மக்களவையில் துணை சபாநாயகர் இல்லாமல் 2,277 நாட்கள் ஆகிறது, மணிப்பூரில் வன்முறை தொடங்கி 861 நாட்கள் ஆகிறது, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரிகளை விதித்து 14 நாட்கள் ஆகிறது, மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா பாஜக தலைவராக 966 நாட்கள் நீடிக்கிறார், மேற்கு வங்கத்தில் மகாத்மா காந்தி வேலைத் திட்டம் நிறுத்தப்பட்டு 1,281 நாட்கள் ஆகிறது, இறுதியாக, மக்களவையில் ஒரு கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்து 4,116 நாட்கள் ஆகிறது. எனவே இந்த எண்கள் மிக முக்கியமானவை.” என்று கூறினார்.