சென்னை: மசோதா மீது முடிவெடுக்க கால நிர்ணயம் செய்த தீர்ப்பை எதிர்த்து குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகள் மீதான வழக்கு ஆக.19-ம் தேதி முதல் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா. ஆர். மகாதேவன் அமர்வு, “மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க ஆளுநர், குடியரசு தலைவருக்கு மூன்று மாத காலம் என்ற ஒரு வரம்பை நிர்ணயித்து தீர்ப்பளித்தது. மேலும், தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தியதால் ஆளுநர் வசம் இருந்த மசோதாக்களை உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சட்டமாக்கியது.
14 கேள்விகள்: இந்நிலையில் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் கால நிர்ணயம் செய்தது தொடர்பாக குடியரசுத் தலைவர் அரசியல் சாசன பிரிவு 143-ஐ பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்திடம் 14 கேள்விகளை எழுப்பி விளக்கம் கோரியிருந்தார்.
அந்த மனுவானது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி சூரியகாந்த் உள்ளிட்ட 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு எடுக்கப்பட்டு. மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
தமிழக அரசு பதில் மனு: இதையடுத்து தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது: குடியரசுத் தலைவரின் கேள்விகள் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட சட்டத்தை சீர்குலைத்து, உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட முடிவுகளை மீறுவதற்காக மாறுவேடத்தில் செய்யப்பட்ட மேல்முறையீடு ஆகும். குடியரசு தலைவர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு தமிழக அரசு ஆளுநருக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கில் வழங்கியுள்ள தீர்ப்பில் விரிவாக உச்ச நீதிமன்றத்தால் பதிலளிக்கப்பட்டுள்ளது.
மேலும் குடியரசு தலைவர் மூலமாக விளக்கம் கோருவது என்பது சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு உச்ச நீதிமன்றம் கால வரம்பு நிர்ணயித்து வழங்கிய தீர்ப்பை நீர்த்து போகச் செய்ய மாறுவேடத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு. எனவே, கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் மனுவை திருப்பி அனுப்ப வேண்டும். இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: வரும் 12-ம் தேதிக்குள் அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஆக.19-ம் தேதி முதல் தொடங்கப்படும். தொடர்ந்து. 19, 20, 21, 26 தேதிகளில் மத்திய அரசு தரப்பு வாதங்களும் செப். 2, 3, 9 தேதிகளில் எதிர்தரப்பு வாதங்களும் நடைபெறும். செப். 10-ம் தேதிக்குள் மத்திய அரசு விரிவான பதிலளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.