புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அவர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
74 வயதான ஜெக்தீப் தன்கர், கடந்த 2022-ல் குடியரசுத் துணைத் தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில், தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:
“மருத்துவ ரீதியான காரணங்களுக்காக குடியரசுத் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து நான் விலகுகிறேன். எனது பணியில் நான் கவனம் செலுத்த எனக்கு ஆதரவு கொடுத்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த பணியில் நான் பெற்ற அனுபவங்கள் மகத்தானது. இந்த பணி காலத்தில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்தையும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிவேக வளர்ச்சியையும் நேரில் கண்டு, அதில் பங்கேற்றதை பாக்கியமாக கருதுகிறேன். தேசத்தின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சகாப்தத்தில் பணி செய்ததை கவுரவமாக கருதுகிறேன்.
இந்நேரத்தில் தேசத்தின் உலகளாவிய எழுச்சி மற்றும் தனித்துவமான சாதனைகளை எண்ணி பெருமிதம் கொள்கிறேன். அதன் எதிர்காலத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை கொண்டிருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞர் டூ குடியரசுத் துணைத் தலைவர்: இந்தியாவின் 14-வது குடியரசுத் துணைத் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்துள்ள ஜக்தீப் தன்கர், ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுன் மாவட்டத்தில் உள்ள கிதான் என்ற கிராமத்தில் கடந்த 1951-ம் ஆண்டு, மே 18-ம் தேதி விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். தனது தொடக்கப் பள்ளி படிப்பினை சொந்த கிராமமான கிதானில் முடித்த தன்கர், உயர்நிலைப் பள்ளிப் படிப்பை சித்தோர்கரில் உள்ள சைனிக் பள்ளியில், முழு உதவித் தொகையில் முடித்தார்.
பள்ளிப் படிப்புக்குப் பின் ஜக்தீப் தன்கர் பட்டப் படிப்பினை ராஜஸ்தானின் ஜெய்பூரில் உள்ள கல்லூரியில் முடித்தார். அங்கு பிஎஸ்சி ஹானர்ஸ் உடன் இணைந்த இயற்பியல் படிப்பை பயின்றார். தீவிர வாசிப்பாளரான ஜக்தீப், விளையாட்டிலும் ஆர்வம் கொண்டவர். அவர் ராஜஸ்தான் மாநில ஒலிம்பிக் கூட்டமைப்பு, ராஜஸ்தான் டென்னிஸ் அமைப்புகளின் தலைவராக இருந்தவர்.
ஜக்தீப் தன்கர் தனது அரசியல் பிரவேசத்தை ஜனதா தளம் கட்சியின் கரம் பற்றித் தொடங்கினார். கடந்த 1989-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது பிரதமர் சந்திரசேகர் ஆட்சியில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறையின் இணை அமைச்சராக சிலகாலம் பதவி வகித்தார்.
பின்பு, கடந்த 2008-ம் ஆண்டு ஜக்தீப் தன்கர் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். அப்போது, ‘நிர்வாகத்தில் முழுமையான திறன் பெற்ற முதல் தலைமுறை வழக்கறிஞர்’ என்று ஜே.பி.நட்டா வர்ணித்திருந்தார். பிரதமர் மோடி, ‘தன்கருக்கு அரசியலமைப்பில் சிறந்த அறிவு உண்டு. மேலும், அவர் பேரவை விவகாரங்களில் நன்கு அறிந்தவர்’ என்று தெரிவித்திருந்தார். எனினும், கட்சிகளைக் கடந்து அனைத்து கட்சித் தலைவர்களிடமும் நல்ல உறவுகளைப் பேணுபவர் என்று அறியப்பட்டவர்.
ஆளுநராக மம்தாவுடன் மோதல்… – இந்தப் பின்புலத்தில், பாஜக தலைமையிலான மத்திய அரசுடன் மோதல் போக்கை கொண்டிருக்கும் மேற்கு வங்க மாநிலத்துக்கு ஆளுநராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். கடந்த 2019-ம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக ஜக்தீப் தன்கர் பொறுப்பேற்றது முதல் மம்தா பானர்ஜி தலைமையிலான மாநில அரசுடன் முரண்பட்ட போக்குகளால் தலைப்புச் செய்திகளில் தொடர்ந்து இடம்பிடித்து வந்தார்.
இந்தச் சூழ்நிலையில்தான் 2022-ல் குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் வந்தது. அப்போது 2024 மக்களவைத் தேர்தலுக்கு பாஜக தயாராகி வந்த காலக்கட்டம். இதனால், ‘பலம் குன்றியுள்ள மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளை சமாளித்து அவையை நடத்த ஒருவர் தேவை’ என்ற நிலை பாஜகவுக்கு இருந்தது.
அதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் தேர்தலில் திரவுபதி முர்முவை நிறுத்தி வெற்றி பெற்றிருந்த பாஜக தலைமையிலான ‘என்டிஏ’ கூட்டணி, குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு, அப்போதைய மேற்கு வங்க ஆளுநரான ஜக்தீப் தன்கரை நிறுத்தியது. அந்த முடிவை, பாஜகவின் உயர் முடிவுகளை எடுக்கும் பாஜகவின் ஆட்சி மன்றக் குழு எடுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, என்டிஏ கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக ஜக்தீப் தன்கர் அறிவிக்கப்பட்டார். இதனை அறிவித்த பாஜக தலைவர் நட்டா, “இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு என்டிஏ வேட்பாளராக ‘விவசாயி மகன்’ ஜக்தீர் தன்கர் அறிவிக்கப்படுகிறார். பொது வாழ்வில் அவருக்கு 30+ ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் இருக்கிறது.
விவசாய குடும்பத்தில் பிறந்த அவர், சமூக – பொருளாதார தடைகளைத் தகர்த்து பொது வாழ்வில் பல உயர் பதவிகளை அடைந்துள்ளார். சட்டப் படிப்புடன், இயற்பியல் படிப்பையும் முடித்துள்ள தன்கர், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கறிஞராக இருந்துள்ளார். அவரைத் தேர்வு செய்யும்போது இவையெல்லாம் கவனத்தில் கொள்ளப்பட்டது” என்று தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடந்து நடந்த குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஜக்தீப் தன்கர் 528 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இண்டியா கூட்டணி வேட்பாளர் மார்கரெட் ஆல்வா 182 வாக்குகளே பெற்றிருந்தார்.
மேற்கு வங்க ஆளுநராக, அம்மாநில அரசுடன் மோதல் போக்கை கொண்டிருந்த ஜக்தீப் தன்கர், குடியரசுத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, மாநிலங்களவையின் தலைவராக பதவியேற்ற 2022-ம் ஆண்டில் இருந்து, தங்களுடன் முரண்பட்ட போக்கை வெளிப்படுத்துவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியாது உன்டு.
இந்தச் சூழ்நிலையில், எதிர்க்கட்சிகளின் நீண்டகால எண்ணமான, மாநிலங்களவைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் அப்போது அது நிராகரிக்கப்பட்டது.
தொடர்ந்து தனது அரசியல் கருத்துகள் மூலம் ஜெக்தீப் தன்கர் கவனம் ஈர்த்து வந்தார். கடந்த மார்ச் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சூழலில் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.