புதுடெல்லி: சட்ட மசோதாக்கள் மீது ஆளுநரும், குடியரசுத் தலைவரும் முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகளுக்கு மத்திய, மாநில அரசுகள் ஒரு வாரத்தில் பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்டகாலமாக கிடப்பில் போட்டதை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஏப்ரல் 8 அன்று பிறப்பித்த உத்தரவில். “தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்காமல். அவற்றை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் பரிந்துரை செய்தது சட்டவிரோதம். அந்த 10 மசோதாக்களும் உடனடியாக சட்டமாக்கப்பட்டு, அமலுக்கு வந்துவிட்டன. மறுநிறைவேற்றம் செய்து அனுப்பிவைக்கப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்திலும், குடியரசுத் தலைவர் 3 மாதங்களிலும் முடிவெடுக்க வேண்டும்” என காலக்கெடு நிர்ணயம் செய்து தீர்ப்பளித்தனர்.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த மே 13-ம் தேதி இந்த விவகாரம் தொடர்பாக அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 143-ஐ பயன்படுத்தி, உச்ச நீதிமன்றத்துக்கு 14 கேள்விகளை எழுப்பி, விளக்கம் கோரி கடிதம் அனுப்பியிருந்தார்.
குடியரசுத் தலைவரின் இந்த கடிதம் வழக்காக விசாரணைக்கு ஏற்கப்பட்டு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் சந்துர்கர் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது குடியரசுத் தலைவரின் இந்த விளக்கம் கோரும் கடிதத்தை விசாரணைக்கு ஏற்கக்கூடாது என்று, திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சனும், கேரளாவை ஆளும் இடது ஜனநாயக முன்னணி சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலும் ஆட்சேபம் தெரிவித்தனர்.
மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் தனது வாதத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பான குடியரசுத் தலைவரின் இந்த விளக்கம், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை பலவீனப்படுத்தும் தீவிரமான முயற்சி என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டி. “இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல” என வாதிட்டார்.
அப்போது மத்திய அரசின் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “அரசியலமைப்பின் 143-வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் தனக்கு எழும் சந்தேகங்களுக்கு விடைகாணும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் கருத்தையும், ஆலோசனையையும் கேட்க வழிவகை உள்ளது. குறிப்பாக, மாநில அரசுகள் நிறைவேற்றும் சட்ட மசோதாக்களில் ஆளுநர்களும், குடியரசுத் தலைவரும் கையெழுத்திடுவதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்கும் நீதித்துறையின் அதிகாரம் குறித்த கூர்மையான கேள்வியும், ஆளுநரின் அரசியலமைப்பு விருப்புரிமையைப் பயன்படுத்துவதில் நீதித்துறையின் தலையீட்டுக்கான சாத்தியக்கூறுகள் குறித்த கேள்வியும் இதில் அடக்கம்” என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், “இந்த வழக்கில் மத்திய அரசு மற்றும் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தரப்பில் ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும், அதன் பிறகு அதில் உள்ள சாராம்சங்களின் அடிப்படையில் காலவரம்பு நிர்ணயம் செய்து விசாரிக்கப்படும். இந்த விவகாரத்தில் அரசியல் சாசனம் தொடர்பாக சில விளக்கங்களும் தேவைப்படுவதால், இந்த வழக்கில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்துக்கு உதவ வேண்டும். இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை ஆகஸ்ட் மாதம் தொடங்கும்” என்று கூறி விசாரணையை வரும் ஜூலை 29-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.