வதோதரா: குஜராத்தின் வதோதராவையும், ஆனந்த் மாவட்டத்தையும் இணைக்கும் காம்பிரா பாலம் இடிந்து விழுந்ததில், ஐந்து வாகனங்கள் ஆற்றில் மூழ்கி 9 பேர் உயிரிழந்தனர்.
வதோதராவின் பத்ரா தாலுகாவில் மஹிசாகர் ஆற்றில் உள்ள காம்பிரா பாலத்தின் ஒரு பகுதி இன்று காலை 7:30 மணியளவில் இடிந்தது. இதில் ஆற்றில் 5 வாகனங்கள் விழுந்ததில், 9 பேர் உயிரிழந்தனர்.
ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் இந்தப் பாலத்தில் எப்போதும் காலை நேரத்தில் கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும். இன்று காலை 7:30 மணியளவில் இரண்டு லாரிகள், ஒரு எஸ்யூவி கார் மற்றும் ஒரு பிக்அப் வேன் உட்பட நான்கு வாகனங்கள் பாலத்தைக் கடக்கும்போது திடீரென பாலம் இடிந்து விழுந்தது.
வாகனங்கள் ஆற்றில் விழுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு மிகப்பெரிய விரிசல் சத்தம் கேட்டதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். விபத்து நடந்தவுடன் தீயணைப்புப் படை குழுக்கள், உள்ளூர் காவல்துறை மற்றும் வதோதரா மாவட்ட நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைத் தொடங்கினர். உள்ளூர் மக்களும் மீட்புப்பணிக்கு உதவி வருகின்றனர்.
மத்திய குஜராத்தை சவுராஷ்டிராவுடன் இணைக்கும் முக்கிய பாதையாக உள்ள இந்தப் பாலம், அரசால் முறையாக பராமரிக்கப்படாததால் இந்த விபத்து நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
காம்பிரா பாலம் கடந்த ஆண்டுதான் பழுதுபார்க்கப்பட்டதாகவும், பாலத்தின் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, மூன்று மாதங்களுக்கு முன்பு ரூ.212 கோடி மதிப்புள்ள புதிய பாலத்திற்கு குஜராத் முதல்வர் ஒப்புதல் அளித்ததாகவும் அரசு அதிகாரிகள் கூறினர். புதிய பாலத்திற்கான வடிவமைப்பு பணிகள் மற்றும் டெண்டர் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.