அகமதாபாத்: குஜராத் மாநிலத்தை சேர்ந்த மூத்த பெண் மருத்துவர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:
கடந்த மார்ச் 15 முதல் ஜூன் 25 வரையில் என்னுடைய செல்போனில் வாட்ஸ்-அப்பில் அழைத்த ஒரு பெண், தனது பெயர் ஜோதி விஸ்வநாத் என்றும் தொலைத்தொடர்புத் துறையில் இருந்து பேசுவதாகவும் கூறினார். இதுபோல காவல் துணை ஆய்வாளர் என மோகன் சிங் என்பவரும் அரசு வழக்கறிஞர்கள் எனக் கூறி மேலும் 3 பேரும் செல்போனில் அழைத்தனர்.
அப்போது, என்னுடைய செல்போனிலிருந்து ஆட்சேபனைக்குரிய தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அவர்கள் அனைவரும் கூறினர். என்னுடைய ஆதார் எண்ணை கேட்டனர். பின்னர் என்னுடைய வங்கிக் கணக்கு பண மோசடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினர். மேலும் என் மீது அந்நிய செலாவணி நிர்வாக சட்டம் மற்றும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் அது தொடர்பான ஆவணத்தையும் அனுப்பினர்.
வழக்கிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் ரூ.20 கோடி தர வேண்டுமென தெரிவித்தனர். இதையடுத்து, வங்கியில் இருந்த வைப்புத் தொகையை திரும்பப் பெற்றும் தங்க நகைகள், பங்குகள் ஆகியவற்றை விற்றும் ரூ.19 கோடியை அவர்கள் கூறிய சுமார் 30 கணக்குக்கு மாற்றினேன். அதன் பிறகுதான் டிஜிட்டல் கைது மோசடியில் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்து புகார் செய்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் புகாரின் பேரில் ஒருவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.