வடோதரா: குஜராத் மாநிலத்தில் ஆற்றுப் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
குஜராத் மாநிலம் வடோதரா மாவட்டம் பத்ரா தாலுகாவில் மஹிசாகர் (மஹி) ஆற்றின் குறுக்கே கம்பீரா – முஜிப்புர் பகுதிகளை இணைக்கும் பாலம் இருந்தது. வழக்கம்போல நேற்று காலை வாகனங்களில் ஏராளமானோர் பள்ளி, கல்லூரிகளுக்கும், வேலைக்கும் சென்று கொண்டிருந்தனர்.
திடீரென பாலத்தின் ஒரு பகுதி இடிந்து ஆற்றில் விழுந்தது. இதனால் பாலத்தில் சென்ற பலர் வாகனங்களுடன் ஆற்றில் விழுந்தனர். இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஆற்றில் நீந்திச்சென்று பலரை மீட்டனர். தகவலறிந்து விரைந்துவந்த போலீஸார், தீயணைப்புப் படையினர், மாநில மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த பாலம் ஆனந்த் மாவட்டத்தையும், வடோதரா மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது. பாலம் இடிந்து விழுந்தது குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட்டது.
முதல்கட்ட விசாரணையில் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த 2 டிரக்குகள், எஸ்யுவி கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் ஆற்றில் விழுந்தது தெரியவந்துள்ளது. பாலம் இடிந்து விழுந்ததை நேரில் பார்த்த பொதுமக்கள் கூறும்போது, ‘‘பாலத்தில் விரிசல் விடும் சப்தம் பயங்கரமாக கேட்டது. சில விநாடிகளில் பாலத்தின் ஒரு பகுதி அப்படியே இடிந்து விழுந்தது’’ என்றனர். பத்ரா எம்எல்ஏ சைதன்யாசின் ஜலா உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு நடத்தினார்.
இதுகுறித்து உள்ளூர் மக்கள் கூறும்போது, ‘‘மத்திய குஜராத்தையும், சவுராஷ்டிரா பகுதியையும் இணைக்கும் முக்கிய பாலமாக இது இருந்தது. இந்த பாலத்தில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். இதை பராமரிக்காமல் அலட்சியமாக விட்டுவிட்டனர். இங்கு போக்குவரத்து நெரிசல் மட்டுமன்றி, அடிக்கடி தற்கொலை செய்து கொள்வதற்கான இடமாகவும் இருந்தது. பலமுறை இது தொடர்பாக அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றும், எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்றனர்.
குஜராத் மாநில அரசு சார்பில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், முழு மருத்துவ சிகிச்சைக்கான செலவை அரசு ஏற்கும் என்றும் முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனப் பிரதமரும் அறிவித்திருந்தார்.