புதுடெல்லி: மணிப்பூரில் வன்முறையில் ஈடுபடும் குகி ஆயுத குழுக்களுடன் 2008-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தங்களை முடிவுக்குக் கொண்டுவருமாறு மத்திய அரசுக்கு, மணிப்பூரைச் சேர்ந்த 4 அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, மணிப்பூர் பழங்குடி மக்கள் மன்றம், மெய்த்தி கூட்டணி, மலைவாழ் நாகா ஒருங்கிணைப்புக் குழு, தடோ இன்பி மணிப்பூர் (TIM) ஆகியவை கூட்டாக கடிதம் எழுதியுள்ளன. அந்தக் கடிதத்தில், ‘குகி ஆயுதக் குழுக்களுக்கு எதிரான பாதுகாப்புப் படை நடவடிக்கையை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் கடந்த 2008-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், குகி தேசிய அமைப்பு (KNO) மற்றும் ஐக்கிய மக்கள் முன்னணி (UPF) ஆகியவை கையெழுத்திட்டுள்ளன. அ
ந்த ஒப்பந்தத்தின் முன்னுரிமையில், “கேஎன்ஓ மற்றும் யுபிஎஃப் ஆகியவை வன்முறைப் பாதையை முற்றிலுமாக கைவிடும். கொலை, காயப்படுத்துதல், கடத்தல், பதுங்கியிருந்து தாக்குதல், மிரட்டல், அச்சுறுத்தும் விதமாக ஆயுதங்களை எடுத்துச் செல்வது, ‘வரி’ அல்லது ‘அபராதம்’ விதிப்பது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் அவை ஈடுபடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கை பராமரிக்க அவை ஆதரவு அளிக்க வேண்டும் என்பதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம். சட்டம் – ஒழுங்கைப் பராமரிப்பது என்பது, மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. எனவே, ஒப்பந்தம் மீறப்படுமானால், அந்த அமைப்புகளுக்கு எதிராக பாதுகாப்புப் படைகள் நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
மணிப்பூரில் நிகழ்ந்த வன்முறைகளுக்கு கேஎன்ஓ, UPF அமைப்புகளும் அவற்றின் கீழ் இயங்கும் 25-க்கும் மேற்பட்ட குழுக்களுமே காரணம். இருந்தும், இந்த அமைப்புகள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது. இதற்குக் காரணம், கூட்டுக் கண்காணிப்புக் குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில்தான் நடவடிக்கை எடுக்க முடியும் என ஒப்பந்தத்தில் உள்ளது. ஆனால், அந்த கூட்டுக் கண்காணிப்புக் குழு என்பது கேஎன்ஓ, யுபிஎஃப் ஆகிய அமைப்புகளைக் கொண்டது.
எனவே, ஒப்பந்தத்தின் குறைபாடு காரணமாக கேஎன்ஓ மற்றும் யுபிஎஃப் அமைப்புகள் மற்றும் அவற்றின் கீழ் இயங்கும் குழுக்களுக்கு எதிராக மாநில அரசு நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது. எனவே, இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வர வேண்டும் என்பதால், ஒப்பந்தத்தை மத்திய அரசு புதுப்பிக்கக் கூடாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.