ஹைதராபாத்: கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, நடைபெற்ற தேர்த்திருவிழாவில், மின்சாரம் பாய்ந்து 6 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஹைதராபாத் ராமாந்தபூரில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் கிருஷ்ணாஷ்டமி மற்றும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா இரண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கோயில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
நேற்று முன்தினம் இரவு கோயிலில் தேர்த்திருவிழாவை நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்திருந்தனர். அப்போது, தேரை இழுக்க பயன்படுத்தப்படும் மற்றொரு வாகனம் பழுதடைந்ததால் என்ன செய்வது என தெரியாமல் அனைவரும் சங்கடப்பட்டனர். அப்போது, அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தேரை இழுத்துச் செல்ல முன்வந்தனர். இதனால் தேர்த்திருவிழா களை கட்டியது.
சிறிது தூரம் தேர் சென்ற நிலையில், தேரின் மேற்பகுதி அங்குள்ள மின் கம்பியில் உரசியது. உடனே தேரில் மின்சாரம் பாய்ந்தது. இதனால் தேரின் கம்பியை பிடித்து இழுத்து கொண்டிருந்த 9 பக்தர்கள் தூக்கி எறியப்பட்டனர். மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால், அப்பகுதியே இருளில் மூழ்கியது.
பின்னர் காயம் அடைந்தவர்கள் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 6 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்த தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மத்திய இணை அமைச்சர் கிஷண் ரெட்டி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஹைதராபாத் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.