ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏகே 56 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து காஷ்மீர் முழுவதும் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இதன் ஒரு பகுதியாக தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாஸ்குசன் வனப்பகுதியில் ராணுவம், மத்திய படைகள், மாநில போலீஸார் இணைந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் மறைந்திருந்த இர்பான் பஷீர், உசைர் சலாம் ஆகிய 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏகே56 ரக துப்பாக்கிகள், குண்டுகள் மற்றும் கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து காஷ்மீர் காவல் துறை வட்டாரங்கள் கூறியதாவது: பஹல்காம் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர். அவர்களை அதிதீவிரமாக தேடி வருகிறோம். குறிப்பாக வனப் பகுதிகளில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சோபியான் மாவட்ட வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத் துறை மூலம் தகவல் கிடைத்தது. இதன்படி அந்த வனப்பகுதியை ராணுவம், சிஆர்பிஎப், மாநில காவல் துறையை சேர்ந்த வீரர்கள் சுற்றி வளைத்தனர்.
இங்குள்ள தோட்டத்தில் லஷ்கர் இ தொய்பாவை சேர்ந்த 2 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை சுற்றிவளைத்து கைது செய்தோம். இதன்மூலம் துப்பாக்கி சண்டை தவிர்க்கப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாக இதே வனப்பகுதியில் இரு இடங்களில் என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டன. இதில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளை உயிரோடு பிடிப்பதன் மூலம் பாதுகாப்பு படையினருக்கு முக்கிய தகவல்கள் கிடைத்து வருகின்றன. இவ்வாறு காஷ்மீர் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.