ஸ்ரீநகர்: காஷ்மீரில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதால் மாதா வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை 9-வது நாளாக நேற்றும் நிறுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் மலைப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ரியாசி மாவட்டத்தில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்கு செல்லும் பாதையில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 34 பக்தர்கள் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். இதையடுத்து வைஷ்ணவி தேவி கோயிலுக்கான யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே, காஷ்மீரில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக வைஷ்ணவி தேவி கோயிலின் கத்ரா அடிவாரப் பகுதியில் 24 மணி நேரத்தில் 200 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
இதனால் சம்மர் பாய்ன்ட் பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதால் 9-வது நாளாக நேற்றும் யாத்திரை நிறுத்தப்பட்டது. எனினும், நிலச்சரிவு ஏற்பட்டபோது பக்தர்கள் யாரும் இல்லாததால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. அதேநேரம், கோயிலில் உள்ள பூஜாரிகள் தொடர்ந்து தினமும் பூஜை செய்து வருகின்றனர்.