புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 லஷ்கர் தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.
இதுகுறித்து ராணுவம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஷ்மீரின் ஷோபியான் மாவட்டம் ஷூகால் கெல்லர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவினர் உளவு தகவல் கொடுத்தனர். இதன் அடிப்படையில் அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்புப் படையினரும் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர்.
இரு தரப்பினருக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.