ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள பிரபலமான தால் ஏரியின் வடக்கு கரையில் ஹஸ்ரத்பால் மசூதி உள்ளது. இதை ஜம்மு காஷ்மீர் முஸ்லிம் வக்பு வாரியம் நிர்வகிக்கிறது. இந்த மசூதி புதுப்பிக்கப்பட்டு சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது. அப்போது, அசோகா தேசிய சின்னம் பொறிக்கப்பட்ட திறப்பு விழா பலகை அங்கு வைக்கப்பட்டது.
இந்நிலையில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் 2 நாட்களுக்கு முன்னர் அந்த தேசிய சின்னத்தை கற்கள் கொண்டு சேதப்படுத்தினர். இதற்கு காஷ்மீர் வக்பு வாரிய தலைவர் மற்றும் பாஜக நிர்வாகி தரக் ஷன் அந்த்ராபி, முதல்வர் உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற விவகாரம் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘காஷ்மீரின் ஹஸ்ரத்பால் மசூதி அமைதியின் சின்னமாக விளங்குகிறது. இங்குள்ள திறப்பு விழா பலகையில் அசோகா தேசிய சின்னம் சேதப்படுத்தியதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்’’ என்றார்.