ஸ்ரீநகர்: நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ள 2 அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்து காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்புகளுக்கு காஷ்மீர் உள்ளூர் மக்கள் உதவி செய்வது அவ்வப்போது கண்டுபிடிக்கப்படுகிறது.
அதன்படி, பாதுகாப்புப் படையினர் நடத்திய தீவிர விசாரணையில் வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் கர்னா என்ற பகுதியில் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றிய குர்ஷித் அகமது ராதெர் மற்றும் கெரான் பகுதியில் அரசு ஆடு வளர்ப்புத் துறையில் இருப்பு கணக்குகள் பராமரிக்கும் ஊழியர் சையது அகமது கான் ஆகிய இருவரும் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்பு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சட்டப்பிரிவு 311: இதையடுத்து அவர்கள் இருவரும் கடந்த ஜனவரி மாதமே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் இருவரையும் அரசுப் பணியில் இருந்து நீக்கி துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா நேற்று உத்தரவிட்டார். அரசியலமைப்பு சட்டப் பிரிவு 311 (2) (சி), நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசு ஊழியரை விசாரணையின்றி பணி நீக்கம் செய்ய வழி வகை செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தைப் பயன்படுத்தி துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா, 2 பேரையும் பணி நீக்கம் செய்துள்ளார். மேலும், 2 பேரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததற்கான முழு ஆதாரங்களையும் பாதுகாப்புப் படையினர் சேகரித்துள்ளனர். தீவிரவாத கட்டமைப்பை ஒடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
இதுவரை 75 பேர்: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு கடந்த ஆகஸ்ட் 2019-ம்
ஆண்டு ரத்து செய்யப்பட்ட பிறகு, இதுவரையில் 75 அரசு ஊழியர்கள் தீவிரவாத தொடர்பு வைத்திருந்த குற்றத்துக்காக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.