புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்துவதாகவும் இதில் சிலர் உயிரிழப்பதாகவும் புகார் எழுந்தது.
இத்தகைய மனித உரிமை மீறல் செயலை தடுக்க, காவல் நிலைய வளாகத்தின் அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது.
இதுபோல, சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளின் அலுவலகங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த உச்ச நீதிமன்றம் கடந்த 2020-ம் ஆண்டு உத்தரவிட்டது. பதிவுகளை ஓராண்டுக்கு சேமித்து வைக்கவும் உத்தரவிட்டது.
இந்நிலையில், கடந்த 8 மாதங்களில் மட்டும் காவல் நிலையங்களின் கட்டுப்பாட்டில் இருந்த 11 பேர் உயிரிழந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
இந்த செய்தியின் அடிப்படையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில், “காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் சரிவர இயங்கவில்லை என ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தாமாக முன்வந்து பொதுநல வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.