புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தில் விரைவில் ஸ்வரண மாதத்தை முன்னிட்டு காவடி யாத்திரை தொடங்க உள்ளது. யாத்திரை செல்லும் சாலைகளில் உள்ள உணவகங்களில் கடை உரிமையாளர் பெயர் உட்பட முழு விவரங்களை அறிவிப்பு பலகைகளில் எழுதி வைக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு பின்பற்றப்படுகிறதா என்று பிரபல துறவி யஷ்வீர் மஹராஜின் சீடர்கள் 5,000 பேர் ஆங்காங்கே சோதனை நடத்தி வருகின்றனர். அவர்களில் ஒரு குழுவினர் முசாபர்நகரின் ‘பண்டிட்ஜி வைஷ்னோவ் தாபா’வை முஸ்லிம்கள் நடத்துவதாக கண்டுபிடித்தனர். அப்போது, அங்கு வேலை செய்தவர்களின் கீழாடைகளை அகற்றி சோதித்தனர். இது பெரும் சர்ச்சையானது. ஆனால், அங்கு வேலை செய்யும் ஒருவர் நேற்று உண்மையை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளரிடம் ஆதார் அட்டையை காட்டி அந்த ஊழியர் கூறும்போது, “எனது உண்மையான பெயர் தஜும்முல். என்னை கோபால் என்ற பெயரில் வேலை செய்ய உரிமையாளர் கேட்டுக் கொண்டார். எனக்கு வேலை வேண்டும் என்பதால் பொய் கூறி வேலையில் செய்தேன். எனது உரிமையாளரும் ஒரு முஸ்லிம். அவரது பெயர் ஸரம்பர்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமாஜ்வாதி எம்எல்ஏ ரவிதாஸ் மல்ஹோத்ரா கூறுகையில், “கடை நடத்தும் பிற்படுத்தப்பட்டோர், தலித், சிறுபான்மையினருக்கு உ.பி. அரசு அநியாயம் செய்கிறது. பெயர் கேட்பது, பேன்ட்டை கழற்றுவது என கொடுமைகள் தொடர்கின்றன. சாதி, மதம் கேட்டு தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளை போல் உ.பி. அரசு விவரங்களை கேட்கிறது” என்று தெரிவித்தார். சமாஜ்வாதி எம்.பி.எஸ்.டி.ஹசனும் இதே கருத்தை தெரிவித்துள்ளார்.
இவர்களது கருத்துக்கு பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக முன்னாள் எம்.பி. துறவி சாத்வீ பிராக்சி கூறும்போது, “இந்துக்கள் பெயரில் தாபா நடத்த நினைத்தால், அவர்கள் இந்து மதத்தில் சேர்ந்து விடவேண்டும்” என்றார்.