புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட காசோலை மோசடி வழக்கு ஒன்றில் நீதிபதிகள் அரவிந்த் குமார், சந்தீப் மேத்தா ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
காசோலை மோசடி வழக்கில் ஒருவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட பிறகு புகார்தாரருடன் சமரசம் செய்து கொண்டால் சிறை தண்டனையை தவிர்க்கலாம். இரு தரப்பினர் இடையே சமரச ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டால், என்ஐ சட்டத்தின் (Negotiable Instruments Act) பிரிவு 138-ன் கீழ் விதிக் கப்பட்ட தண்டனை ரத்தாகிவிடும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
காசோலை மோசடி வழக்கில் இரு தரப்பினர் இடையிலான சமரச உடன்பாட்டுக்கு பிறகு குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றம் ரத்துசெய்ய மறுத்திருந்தது. இது தொடர்பான உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்ற அமர்வு பிறப்பித்த உத்தரவில், “காசோலை மோசடி குற்றம் என்பது ஒரு சிவில் தவறு. இது சமரசம் மூலம் தீர்வு காணக்கூடியது. வழக்கின் எந்தவொரு கட்டத்திலும் சம்பந்தப்பட்ட நபர்கள் சமரசத்துக்கு வரக்கூடியது’’ என்று கூறியுள்ளனர்.