புதுடெல்லி: காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்து வைப்பதாக கூறி பக்தர்களிடம் ரூ.1,000 முதல் ரூ.5,000 பெற்று மோசடி செய்தது தொடர்பாக 21 போலி பண்டிதர்களை உ.பி. போலீஸார் கைது செய்துள்ளனர்.
உ.பி.யின் புனித நகரங்களில் ஒன்றான வாராணசியில் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. வாராணசி எம்.பி.யான பிரதமர் மோடியின் முயற்சியால் இக்கோயில் பல ஆயிரம் கோடி ரூபாயில் புனரமைக்கப்பட்டு புதிய பொலிவுடன் விளங்குகிறது. இதன் பிறகு இக்கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இவர்கள் நீண்டவரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது.
இதனை சாதகமாக்கிய இளைஞர்கள் கும்பல் ஒன்று தங்களை கோயிலின் அதிகாரப்பூர்வ பண்டிதர்கள் என்று கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளது. பக்தர்களிடம் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை பெற்று சிறப்பு தரிசனம் செய்து வைப்பபதாக கூறி இவர்கள் ஏமாற்றி வந்துள்ளனர்.
இது தொடர்பான புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு காசி விஸ்வநாதர் கோயிலின் தலைவரும் வாராணசி மண்டல ஆணையருமான தமிழர் எஸ்.ராஜலிங்கம் உத்தரவிட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்திய வாராணசி போலீஸார் இதுவரை 21 போலி பண்டிதர்களை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் வாராணாசியின் மற்றொரு தமிழ் அதிகாரியான காவல் துணை ஆணையர் டி.சரவணன் கூறும்போது, “இதற்காக ஒரு காவல் படை அமைத்து அப்பாவி பக்தர்கள் போல் கோயிலைச் சுற்றி நடமாட வைத்தோம். அப்போது அவர்களை அணுகிய போலி பண்டிதர்களை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தோம். மோசடியில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகிறோம். கோயில் பெயரில் செயல்படும் போலி இணைய தளங்கள் மீதும் சைபர் கிரைம் பிரிவின் உதவியுடன் நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார்.
இந்த போலி இணையதளங்கள் மூலமாகவும் பல லட்சம் ரூபாய் மோசடி நடைபெறுகிறது. உள்நாடு மற்றும் வெளிநாட்டு பக்தர்களிடம் சிறப்பு தரிசன டிக்கெட், ருத்ராட்ச மாலைகள், பிரசாத விற்பனை உள்ளிட்டவை பெயரிலும் மோசடி நடைபெறுகிறது. இது தொடர்பாகவும் வாராணசி சைபர் கிரைம் போலீஸார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.