புதுடெல்லி: பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெற்றது. இதில் 60 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வாக்குகள் திருடப்படுவதாக கூறி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் அதிகார யாத்திரை மேற்கொண்டார். இந்த யாத்திரையின் கடைசி நாளான திங்கள்கிழமை ராகுல் காந்தி பேசும்போது, “வாக்கு திருட்டு தொடர்பாக விரைவில் ஹைட்ரஜன் குண்டு வீச உள்ளோம். அதன் பிறகு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடியால் தனது முகத்தைக் காட்ட முடியாது” என்றார்.
இதனிடையே, வாக்காளர் பட்டியலில் காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெராவின் பெயர் 2 இடங்களில் இருப்பதாக பாஜக குற்றம்சாட்டியது. இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்த சூழ்நிலையில், பவன் கெராவின் மனைவி கோட்டா நீலிமாவுக்கு புதுடெல்லி மற்றும் தெலங்கானாவின் கைரதாபாத் தொகுதி என 2 இடங்களில் வாக்காளர் அட்டை இருப்பதாக பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா நேற்று குற்றம்சாட்டினார். இதன் மூலம் காங்கிரஸ் தலைவர்கள் பலரிடம் 2 வாக்காளர் அடையாள அட்டை இருப்பது தெரியவந்துள்ளது.
வாக்குகள் திருடப்படுவதாக குற்றம்சாட்டுபவர் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் 2 வாக்காளர் அட்டை வைத்திருப்பது பற்றி பதில் சொல்ல வேண்டும் என மாளவியா கேட்டுக் கொண்டுள்ளார்.