பெங்களூரு: காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இதயத் துடிப்பில் மாறுபாடு ஏற்பட்டதால், ‘பேஸ்மேக்கர்’ கருவி பொருத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தொலைபேசியில் அவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர்.
காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே (82), தசரா விடுமுறைக்காக டெல்லியில் இருந்து கடந்த 29-ம் தேதி பெங்களூரு வந்திருந்தார். கடந்த 30-ம் தேதி அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு, மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் பெங்களூருவில் உள்ள எம்.எஸ்.ராமையா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
‘பேஸ்மேக்கர்’ கருவி: அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இதயத் துடிப்பில் மாறுபாடு இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, அறுவை சிகிச்சை மூலம் ‘பேஸ்மேக்கர்’ கருவி பொருத்தப்பட்டது. சிகிச்சை நல்லபடியாக முடிந்துள்ளதால், அவர், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் நேற்று மருத்துவமனையில் அவரை சந்தித்து நலம் விசாரித்தனர். பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கார்கேவை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தனர். கார்கே விரைந்து குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கார்கேவின் மகனும், கர்நாடக மாநில அமைச்சருமான பிரியங்க் கார்கே கூறும்போது, “மல்லிகார்ஜுன கார்கே நலமுடன் இருக்கிறார். உடலில் வயோதிகம் சார்ந்த சில பிரச்சினைகள் இருந்தன. பேஸ் மேக்கர் கருவி பொருத்தும் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. அவர் 3-ம் தேதி (இன்று) வீடு திரும்பி, வழக்கமான பணிகளை மேற்கொள்வார்” என்றார்.