புதுடெல்லி: ஹரியானாவில் கடந்த 2008-ம் ஆண்டு காங்கிரஸ் முதல்வராக பூபிந்தர் சிங் ஹூடா இருந்த போது, ஆங்கரேஸ்வர் பிராபர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் (ஓபிபிஎல்) என்ற நிறுவனம் குருகிராமத்தில் தான் வைத்திருந்த நிலத்தில் வீடு கட்டுவதற்கான உரிமத்தை பெற முயற்சித்தது.
அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா தனது செல்வாக்கை பயன்படுத்தி ஓபிபிஎல் நிறுவனத்துக்கு நகர் ஊரமைப்பு இயக்ககத்திலிருந்து (டிடிசிபி) உரிமம் பெற்று தந்தார்.
இதற்கு பிரதிபலனாக குருகிராமில் 3.5 ஏக்கர் நிலத்தை ராபர்ட் வதேராவுக்கு ஓபிபிஎல் நிறுவனம் வழங்கியது. ஆனால் இதை ரூ.7.5 கோடிக்கு வாங்கியதாக ராபர்ட் வதேரா கூறுகிறார். இது பொய் என கூறிய அமலாக்கத்துறை, ராபர்ட் வதேராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம் (எஸ்எல்எச்பிஎல்) வங்கி கணக்கில் அப்போது ரூ.7.5 கோடி பணம் இல்லை எனவும், அவர்கள் தெரிவித்த காசோலை எண், வங்கியில் பணமாக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது. இந்த நிலத்தை ராபர்ட் வதேராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம், டிஎல்எப் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு ரூ.58 கோடிக்கு விற்றது.
இவ்வாறு குற்றப்பத்திரிக்கையில் அமலாக்கத்துறை கூறியுள்ளது. இதையடுத்து நிதிமோசடி தடுப்புச் சட்ட நீதிமன்றம் ராபர்ட் வதேராவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் ஃபரிதாபாத்தில் உள்ள ராபர்ட் வதேராவின் 39.7 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை கடந்த மாதம் 16-ம் தேதி பறிமுதல் செய்தது. இதன் மதிப்பு ரூ.37 கோடி.
பிரியங்காவுக்கு சிக்கல்: பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட்டபோது, தனது வேட்பு மனுவில் கணவர் வதேராவின் சொத்து விவரங்களை தெரிவிக்கவில்லை. இதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வேட்பு மனுவில் சொத்துகளை மறைத்தால் அது தண்டனைக்குரிய குற்றம். தகுதி நீக்கம், சிறை தண்டனைக்கும் வாய்ப்புள்ளது.