திருவனந்தபுரம்: பிரதமர் மோடி தலைமையிலான அரசு, முந்தைய காங்கிரஸ் அரசுகளை விட கேரளாவுக்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
திருவனந்தபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட பாஜக அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய அமித்ஷா, “கேரளாவின் ஆளும் இடது ஜனநாயக முன்னணி மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகிய இரண்டும் ஊழல் நிறைந்தவை. கேரள மாநிலத்தின் மீது மத்திய அரசு மாற்றாந்தாய் அணுகுமுறையோடு இருப்பதாகக் கூறுவது தவறு. மோடி தலைமையிலான மத்திய அரசு முந்தைய யுபிஏ அரசாங்கத்தை விட கேரளாவுக்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ளது.
எல்டிஎஃப் மற்றும் யுடிஎஃப் அரசுகள் ஊழல் நிறைந்த அரசாங்கமாக இருந்து வருகிறது. எடிஎஃப் அரசாங்கத்தில் கூட்டுறவு வங்கி ஊழல், ஏஐ கேமரா ஊழல், லைஃப் மிஷன் ஊழல், பிபிஇ கிட் ஊழல் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய தங்கக் கடத்தல் ஊழல் ஆகியவை நடைபெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அரசு கேரளாவுக்கு காங்கிரஸ் அரசுகள் விடுவித்த நிதியைவிட பல மடங்கு நிதியை விடுவித்தது. இது குறித்த ஒவ்வொரு விவரத்தையும் இன்று பாஜக தலைமை அலுவலகம் மூலம் பகிரங்கமாக வெளியிடுவேன்.
பிரதமர் மோடி கேரளாவின் வளர்ச்சிக்கு மூன்று முக்கிய தொலைநோக்கு திட்டங்களைக் கொண்டுள்ளார். ஊழல் இல்லாத நிர்வாகம், அரசுத் திட்டங்களில் பாகுபாடு இல்லாதது மற்றும் அரசியல் நன்மைகளுக்கு அப்பால் கேரளாவின் வளர்ச்சி ஆகிய மூன்று இவை ஆகும். பாஜக மற்றும் சிபிஐ(எம்) இரண்டுமே ஒழுங்கமைப்பட்ட கட்சிகள். ஆனால் இரண்டிற்கும் இடையே ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. சிபிஎம்-க்கு மாநிலத்தின் வளர்ச்சியை விட கட்சி நலன் பெரியது. அதே நேரத்தில் பாஜக கட்சி கட்டமைப்பை விட மக்கள் நலனை முன்னிறுத்துகிறது” என்றார்
தொடர்ந்து பேசிய அவர், “இந்தியா மார்ச் 31, 2026-க்குள் நக்சலிசம் இல்லாத நாடாக மாறும். பயங்கரவாதத்திற்கு பிரதமர் மோடி மற்றும் பாஜகவைத் தவிர வேறு யாராலும் பதிலளிக்க முடியாது. உரி தாக்குதலுக்கு சர்ஜிக்கல் ஸ்டிரைக், புல்வாமா தாக்குதல்களுக்கு வான்வழித் தாக்குதல், பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்று பதிலளித்தோம்.” என்று அவர் கூறினார்.
140 உறுப்பினர்களை கொண்ட கேரள சட்டமன்றத்துக்கு 2026ம் ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் சிபிஎம் தலைமையிலான எல்டிஎஃப், காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் மற்றும் பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.