புதுடெல்லி: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதன் மூலம், காங்கிரஸ் கட்சியின் இந்து பயங்கரவாதம் எனும் சதி முறியகடிக்கப்பட்டுள்ளது என்று பாஜக மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட 7 பேரும் விடுவிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத், “காங்கிரஸின் இந்து பயங்கரவாத சதி முறியடிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவருக்கும் எதிராக எந்த ஆதாரமும் இல்லை. காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடிய கர்னல் புரோஹித் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம், சாத்வி பிரக்யா சிங் தாக்கூருக்குச் சொந்தமானது என கூறி அவரும் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு நடக்க முடியாத அளவுக்கு அவர் சித்ரவதை செய்யப்பட்டார். இது வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் செய்த சதி.
வாக்குகளைப் பெறுவதற்காக காங்கிரஸ் எந்த எல்லைக்கும் செல்லும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சுமத்தப்பட்ட எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை. தாங்கள் சித்ரவதை செய்யப்பட்டு, அறிக்கை வெளியிட கட்டாயப்படுத்தப்பட்டதாக சாட்சிகளும் கூறினார்கள்.
ப. சிதம்பரம் பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் வழங்கியது மட்டுமல்ல, அவர் உள்துறை அமைச்சராக இருந்தபோது காவி பயங்கரவாதம் எனும் பிரச்சினையை எழுப்பி ஒரு கதையை உருவாக்க சதி செய்தார். ராகுல் காந்தி ஏன் உண்மையை விட்டு ஓடுகிறார்? சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். சாத்வி பிரக்யா சிங் சித்ரவதை செய்யப்பட்ட விதத்தை என்னால் வெளிப்படையாகச் சொல்ல முடியாது. பொய்யாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். பொய்யாக குற்றம் சாட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” என வலியுறுத்தினார்.
பாஜக மூத்த தலைவரும் எம்பியுமான நிஷிகாந்த் துபே, “மாநிலங்களவையில் நேற்று பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒரு இந்து, பயங்கரவாதியாக இருக்க முடியாது என கூறினார். இந்த நாட்டில் உள்ள அனைத்து பயங்கரவாதிகளும் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே சார்ந்தவர்கள். அது நிரூபிக்கப்பட்டுள்ளது. காவி பயங்கரவாதம் எனும் பதத்தைப் பரப்பும் மோசமான வேலையை காங்கிரஸ் செய்தது. இப்போது எல்லாம் தெளிவாகிவிட்டது. அதன் விளைவுகளை காங்கிரஸ் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். பாகிஸ்தான் பயங்கரவாதிகளை பிடிப்பதற்குப் பதில் இந்தியர்கள் மீது ஏன் குற்றம் சுமத்தப்பட்டது?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவரும் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருமான உமா பாரதி, “இந்த தீர்ப்பு அளித்துள்ள மகிழ்ச்சியை என்னால் வார்த்தைகளால் விளக்க முடியாது. பிரக்யா சிங் தாகூர் நாசிக் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, ஒரு போலீஸ் அதிகாரியால் மிகவும் சித்ரவதை செயயப்பட்டதை அறிந்தேன். வேறு யாரும் இல்லாத நேரத்தில் அவரை சந்திக்க சிறைக்குச் சென்றேன். அவர் சித்ரவதை செய்யப்பட்ட விதம் எந்த பெண்ணாலும் தாங்கிக் கொள்ள முடியாதது. காவி பயங்கரவாதம் என்பதை நிறுவ முயன்ற ப. சிதம்பரம், திக்விஜய் சிங், ராகுல் காந்தி, இடதுசாரிகள், சமாஜ்வாதி கட்சி தலைவர்களுக்கு என்ன தண்டனை தருவது என நான் கேட்க விரும்புகிறேன். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” என வலியுறுத்தினார்.
பாஜக எம்பி ரவி கிஷன் கூறுகையில், “மகிழ்ச்சி அடைவதா சோகப்படுவதா என்று எங்களுக்குத் தெரியவில்லை. நாடாளுமன்றத்தில் எனது இருக்கைக்கு அருகில்தான் எனது சகோதரி சாத்வி பிரக்யா அமர்வார். அவரது உடல் செயலிழந்துவிட்டது. பொய்யான குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட குற்றம் சாட்டப்பட்டவர்களும் அவர்களது குடும்பத்தினரும் எத்தகைய துன்பங்களை அனுபவித்திருப்பார்கள். அந்த 17 ஆண்டுகளை யாரால் திருப்பித் தர முடியும்?
காவி பயங்கரவாதம் என்ற வார்த்தையை உருவாக்கிய காங்கிரஸ் இதற்கு பதில் சொல்ல வேண்டும். அவர்கள் அனைவருமே இதற்கு பொறுப்பேற்க வேண்டும். காவி பயங்கரவாதம் என்று எந்த ஆதாரத்துடன் 100 கோடி இந்துக்களுக்கு எதிராக அவர்கள் பேசத் தொடங்கினர். இந்த சதிக்குப் பின்னால் மூளையாக இருந்தவர் யார்? ஒரு இந்து பயங்கரவாதியாக இருக்க முடியாது என்பது இந்த தீர்ப்பின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. காவி பயங்கரவாதம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக நாடாளுமன்றத்தில் நாங்கள் பதில் கோருவோம்” என தெரிவித்தார்.
இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத், “பாதிக்கப்பட்ட எவர் வேண்டுமானாலும் மேல் முறையீடு செய்ய முடியும். பாஜக என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். தற்போது வழங்கப்பட்டிருப்பது நீதிமன்றத்தின் தீர்ப்பு. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியும். பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் மேல் முறையீடு செய்வார்கள்.” என தெரிவித்தார்.