பெங்களூரு: கர்நாடக முதல்வர் மாற்றப்படுகிறாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த கர்நாடக மாநிலத்துக்கான காங்கிரஸ் பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, இதுபோன்ற விஷயங்களை கட்சி மேலிடம்தான் எடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வராக டி.கே.சிவக்குமார் விரைவில் பொறுப்பேற்பார் என அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலர் தொடர்ந்து கூறி வருகிறார்கள். இந்த விவகாரம் அம்மாநில அரசியலில் கடந்த சில வாரங்களாக முக்கிய பேசுபொருளாக மாறி இருக்கிறது. டி.கே.சிவக்குமார் டெல்லியில் உள்ள நிலையில், சித்தராமையா நாளை டெல்லி செல்ல இருக்கிறார். இந்நிலையில், கர்நாடக எம்எல்ஏக்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்திக்கும் நோக்கில் சுர்ஜேவாலா பெங்களூருக்கு விரைந்துள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சுர்ஜேவாலா, “முதல்வர் மற்றும் துணை முதல்வரின் டெல்லி பயணம் என்பது மத்திய அரசு தொடர்பானது. மாநிலத்தின் கோரிக்கைகளை முன்வைக்கவும், மத்திய அரசு பாகுபாடு காட்டக் கூடாது என்பதை வலியுறுத்தவுமே அவர்கள் செல்கிறார்கள். தலைமை மாற்றம் தொடர்பாக என்ன சொல்ல வேண்டுமோ அதனை நான் கடந்த வாரமே உங்களிடம் (பத்திரிகையாளர்களிடம்) தெரிவித்துவிட்டேன்.
ஒரு செய்தியாளருக்கு தான் பணிபுரியும் தொலைக்காட்சியின் எடிட்டராக வேண்டும் என்ற ஆசை இருக்கலாம். ஆனால், இறுதியில் தொலைக்காட்சியின் உரிமையாளர்தான் எடிட்டரைத் தேர்வு செய்வார். நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், இந்த விவகாரம் ஒரு பிரச்சினை இல்லை. அப்படி எதுவும் இல்லை” என தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய சுர்ஜேவாலா, முதல்வர் மாற்றம் என்பது கற்பனைதான் என்றும், அதில் உண்மை ஏதும் இல்லை என்றும் கூறி இருந்தார். அதேநேரத்தில், முதல்வர் மாற்றப்படுகிறாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இது குறித்து கட்சி மேலிடம் முடிவெடுக்கும் என கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.