புதுடெல்லி: கர்நாடகாவில் முதல்வரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. இது தொடர்பாக காங்கிரஸில் எந்த விவாதமும் நடைபெறவில்லை என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, “முதல்வர் பதவி தொடர்பாக எவ்வித ஆலோசனையும் நடைபெறவில்லை. இது எனது பதில். முதல்வர் பதவி காலியாக இல்லை என்று டி.கே.சிவகுமாரும் கூறி இருக்கிறார். கட்சி மேலிடம் என்ன முடிவு எடுத்தாலும் நாங்கள் இருவரும் அதற்கு கட்டுப்படுவோம்” என கூறினார்.
அப்படியானால், கர்நாடக மாநிலத்துக்கான காங்கிரஸ் பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, எம்எல்ஏக்களை தனித்தனியாகச் சந்திப்பதன் நோக்கம் என்ன என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த சித்தராமையா, “தலைமை (முதல்வர்) மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை என சுர்ஜேவாலா தெளிவாகக் கூறிவிட்டார். தலைமை மாற்றம் தொடர்பாக எவ்வித ஆலோசனையும் நடைபெறவில்லை என்றும் அவர் கூறி இருக்கிறார். அவரே அப்படி கூறிவிட்ட பிறகு அதில் கேட்பதற்கு என்ன இருக்கிறது?” என தெரிவித்தார். மேலும் அவர், “ராகுல் காந்தியை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறேன். இதுவரை தகவல் இல்லை” என்றும் கூறினார்.
கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் நிகழ இருப்பதாக தீவிரமான ஊகங்கள் வெளியாகி உள்ள நிலையில், சித்தராமையா இவ்வாறு கூறி இருக்கிறார். சித்தராமையாவுக்கு பதில் டி.கே. சிவக்குமாரை முதல்வராக்க கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சுழற்சி முறையில் முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற கட்சி மேலிடத்தின் முடிவின்படி இது நிகழ இருக்கிறது என கூறப்படுகிறது.
முன்னதாக, சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், “சந்தீப் சுர்ஜேவாலா எம்எல்ஏக்களை தனித்தனியாகச் சந்திப்பதற்கும் தலைமை மாற்றத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. கட்சியின் எம்எல்ஏக்களிடம் நான் எந்த ஆதரவையும் எதிர்பார்க்கவில்லை. கட்சியை உயிர்ப்போடு வைத்துக்கொள்வது, கட்சியின் ஒழுங்கு மேலும் வலுவானதாக இருப்பதை உறுதி செய்வது ஆகியவை எனது கடமை.
அடுத்து வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தல், 2028-ல் வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றில்தான் எனது கவனம் உள்ளது. தற்போது நடப்பது தலைமை மாற்றத்துக்கானது அல்ல. அதற்காகவும் நான் இல்லை. காங்கிரஸ் கட்சியில் எந்த கோஷ்டியும் இல்லை. நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இருக்கிறோம்” என தெரிவித்தார்.