பெங்களூரு: கர்நாடகாவில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக 2 பாஜக எம்எல்ஏக்களை கட்சி மேலிடம் 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்துள்ளது.
கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டம் எல்லாபுரா சட்டப்பேரவை தொகுதியின் பாஜக எம்எல்ஏ சிவராம் ஹெப்பார் கட்சி மேலிடத்தையும், மாநில தலைவர் விஜயேந்திராவையும் கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக விமர்சித்தார். இதனால் அவர் தனது பழைய கட்சியான காங்கிரஸுக்கே திரும்ப போவதாகவும் தகவல் வெளியானது.
இதேபோல பெங்களூருவில் உள்ள யஷ்வந்த்பூர் தொகுதியில் எம்எல்ஏ எஸ்.டி. சோமசேகரும் பாஜக மாநில தலைமையுடன் மோதலில் ஈடுபட்டார். கர்நாடக பாஜக எடியூரப்பாவின் குடும்ப சொத்தாக மாறிவிட்டது என அவர் விமர்சித்தார். இதனால் மாநில தலைவர் விஜயேந்திரா, இருவர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு பாஜக மேலிடத்துக்கு புகார் அளித்தார்.
இதுகுறித்து பாஜகவின் மத்திய ஒழுங்கு நடவடிக்கை குழுவின் செயலாளர் ஓம் பதாக் கூறும்போது, ”கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் சிவராம் ஹெப்பார், எஸ்.டி.சோமசேகர் ஆகிய இருவரும் கட்சியின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் 6 ஆண்டுகள் பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள்” என அறிவித்துள்ளார். பாஜகவின் இந்த முடிவுக்கு இருவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கர்நாடக காங்கிரஸ் தலைவரும் துணை முதல்வருமான டி.கே.சிவகுமாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட சிவராம் ஹெப்பார், எஸ்.டி.சோமசேகர் ஆகிய இருவரும் விரைவில் காங்கிரஸில் இணையப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.