பெங்களூரு: கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள கார்வார் தொகுதியின் எம்எல்ஏ சதீஷ் கிருஷ்ணா சைல் (59) சட்ட விரோதமாக ரூ.38 கோடி மதிப்பிலான கனிம வளங்களை ஏற்றுமதி செய்ததாக சுரங்க மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு பெங்களூருவில் மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் அமலாக்கத்துறை வழக்கு பதிந்து, சதீஷ் கிருஷ்ணாவுக்கு சொந்தமான 15 இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், ‘‘சதீஷ் கிருஷ்ணா சைல் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான 15 இடங்களில் 2 தினங்கள் சோதனை நடத்தப்பட்டது.
அதில் ரூ.1.68 கோடி ரொக்கம், 6.75 கிலோ தங்கம், 268 கிலோ வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. பல்வேறு வங்கி கணக்குகளில் இருந்த ரூ.14.13 கோடி முடக்கப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.