பெங்களூரு: கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரி உட்பட 8 அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்தா போலீஸார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.50 கோடி மதிப்பிலான பணம், தங்க நகைகள் மற்றும் ஆவணங்கள் சிக்கின.
கர்நாடக மாநிலத்தில் அரசு பணியில் உள்ள முக்கிய அரசு அதிகாரிகள் ஊழலில் ஈடுபடுவதாக லோக் ஆயுக்தா போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் லோக் ஆயுக்தா போலீஸார் நேற்று பெங்களூரு, மங்களூரு, மைசூரு, துமக்கூரு, குடகு, கொப்பல், பெலகாவி உள்ளிட்ட இடங்களில் உள்ள 8 அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான 45 இடங்களில் சோதனை நடத்தினர்.
நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 6 மணி வரை நீடித்தது. இந்த சோதனையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டனர். பெங்களூரு நகர்ப்புற ரயில்வே திட்டத்தின் சிறப்பு துணை ஆணையரும் ஐஏஎஸ் அதிகாரியுமான வசந்தி அமருக்கு சொந்தமான ஆர்.டி.நகர் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் கடந்த ஆண்டு தாசநாரயணபுரா பகுதியில் 10.2 ஏக்கர் நிலத்தை வாங்கிய ஆவணம் சிக்கியது.
இதுதவிர ரூ.12 லட்சம் ரொக்கம், 340 கிராம் தங்க நகைகள், விலை உயர்ந்த கைகடிகாரங்கள், சொத்துக்களின் ஆவணங்கள் உள்ளிட்டவையும் சிக்கின. இதையடுத்து லோக் ஆயுக்தா அதிகாரிகள் அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வழக்குப்பதிவு செய்தனர்.
குடகு மாவட்டம் மடிக்கேரியில் திறன் மேம்பாட்டு தொழில்முனைவோர் மற்றும் வாழ்வாதாரத் துறையின் இணை இயக்குநர் மஞ்சுநாதசாமியின் வீட்டில் சோதனை நடத்திய போது, கணக்கில் வராத ரூ.16 லட்சம் ரொக்கம், 256 கிராம் தங்க நகைகள் சிக்கின. கொப்பலில் மாவட்ட தொழில் மையத்தின் உதவி இயக்குநர் ஷேக் ஃபகத்தின் வீட்டில் சோதனை நடத்திய போது 765 கிராம் தங்க நகைகள், ரூ.6 லட்சம் ரொக்கம், 16 விலை உயர்ந்த கைகடிகாரங்கள், 330 அரிய நாணயங்கள் உள்ளிட்டவை சிக்கின.
இதுதவிர பெங்களூரு சககார் நகரில் உள்ள நகர மற்றும் கிராமப்புற திட்டத் துறையின் உதவி இயக்குநர் எரப்பா ரெட்டி, மைசூரு மாநகர அலுவலக உதவியாளர் வெங்கடராம், துமக்கூருவில் கே.ஐ.ஏ.டி.பி.யின் உதவி நிர்வாகப் பொறியாளர் ராஜேஷ் உள்ளிட்டோரின் வீடுகளில் நடத்திய சோதனையில் ரொக்க பணமும், சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து லோக் ஆயுக்தா போலீஸார் வெளியிட்ட அறிக்கையில், ‘‘அரசு அதிகாரிகள் 8 பேரின் வீடுகளில் நடத்திய சோதனையில் ரூ.49.89 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்க நகைகள், சொத்து ஆவணங்கள் சிக்கியுள்ளன. அந்த 8 அதிகாரிகள் மீதும் பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.