பெங்களூரு: கர்நாடகாவில் ஆயில் குமார் என்பவர் தினமும் ஏழெட்டு லிட்டர் இன்ஜின் ஆயில் குடித்து உயிர் வாழ்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. உடலுக்கு தீங்கான ஆயிலை குடித்து வரும் இவர் இதுவரை மருத்துவமனைக்கே சென்றதில்லை என கூறுவது வியப்பின் உச்சிக்கு அழைத்து செல்கிறது.
அண்மையில் சமூக வலைதளங்களில் ஆயில் குமார் குறித்த வீடியோ ஒன்று வைரலானது. அதில், ஐயப்ப சுவாமி பக்தர் ஒருவர் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் இன்ஜின் ஆயிலை குடித்துக்கொண்டே பேசுகிறார். இந்த வீடியோவை கண்ட லட்சக்கணக்கான பார்வையாளர்கள் ஆச்சரியத்தோடு பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள 45 வயது மதிக்கத்தக்க நபரின் பெயர் குமார். கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்தவர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தினமும் ஏழெட்டு லிட்டர் இன்ஜின் ஆயிலை குடிப்பதால் மக்களால் ‘ஆயில் குமார்’ என அழைக்கப்படுகிறார். காலை, மதிய உணவை உண்ணாமல் மூன்று வேளையும் ஆயிலே குடித்து வருகிறார். ஆனாலும் இதுவரை உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதே இல்லை.
வருடந்தோறும் சபரி மலை ஐயப்பன் கோயிலுக்கு பாத யாத்திரையாக செல்வதால் தனக்கு எந்த தீங்கும் நேரவில்லை என ஊடகங்களுக்கு அவர் பேட்டியளித்துள்ளார்.
மருத்துவர்கள் எச்சரிக்கை: இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் கூறும்போது, ‘‘பயன்படுத்தப்பட்ட இன்ஜின் ஆயில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. அதிலுள்ள பாலிசைக்ளிக் ஹைட்ரோ கார்பன் புற்றுநோயை உருவாக்கும். ஆயிலில் கலக்கப்பட்டுள்ள இரும்பு, அலுமினியம், தாமிரம், ஈயம் போன்ற தனிமங்கள் நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், நரம்பு மண்டலம் ஆகியற்றை கடுமையாக பாதிக்கும். இதை குடித்தாலோ, தொடர்ந்து சுவாசித்தாலோ சுவாச மண்டல பாதிப்பும் வயிற்று போக்கும் ஏற்படும்’’ என தெரிவிக்கின்றனர். ஆனால் ஆயில் குமார் எந்த பாதிப்பும் இல்லாமல் இன்ஜின் ஆயில் குடித்தவாறே பாத யாத்திரை மேற்கொள்வது வியப்பை ஏற்படுத்துகிறது.ஆயில் குமார்