பெங்களூரு: கர்நாடகாவில் 14 முக்கிய கோயில்களின் சேவை கட்டணங்கள் வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக இந்து அற நிலையத்துறை அறிவித்துள்ளது. இந்த முடிவை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
கர்நாடகாவில் இந்து அறநிலையத்துறை அமைச்சகத்தின்கீழ் 34,566 கோயில்கள் உள்ளன. இதில் ஏ பிரிவில் உள்ள 14 முக்கிய கோயில்களின் சேவை கட்டணம் வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக அற நிலையத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.
அதன்படி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ யோக நரசிம்ம ஸ்வாமி கோயில், நந்தி தீர்த்த சுவாமி கோயில், குக்கே ஸ்ரீ சுப்ரமணியா கோயில், ரெய்ச்சூரில் உள்ள ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கோயில் உள்ளிட்ட 14 கோயில்களின் பூஜை, யாகம், பிரதிஷ்டை சடங்குகள் ஆகியவற்றுக்கான கட்டணங்கள் ரூ.100 முதல் ரூ.250 வரை உயர்த்தப்பட்டுள்ளது. குக்கே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரபலமான ஆஷ் லேஷ பூஜை, நகர பிரதிஷ்டை சடங்குகளுக்கான கட்டணம் ரூ.400-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
திரும்ப பெற வேண்டும்: இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ஆர். அசோகா கூறும்போது, “இந்து கோயில்களின் சேவை கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் முதல்வர் சித்தராமையா இந்துக்களுக்கு இடையூறை ஏற்படுத்தி வருகிறார் என்பது உறுதியாகிறது. இது இந்து மக்களுக்கு எதிரான நடவடிக்கை. இதனை அரசு திரும்ப பெற வேண்டும்” என்றார்.
கோயில் நிர்வாகங்கள்: இந்து அறநிலையத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறுகையில், ‘‘கோயில்களின் சேவை கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கை என்பது அந்தந்த கோயில் நிர்வாகங்களால் எடுக்கப்பட்டது. அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சேவை கட்டணம் நிர்ணயிப்பதில் அரசு தலையிடுவதில்லை. இந்த கோயில்களில் கிடைக்கும் பணம் அரசுக்கு வருவதும் இல்லை. அந்தந்த கோயிலின் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது” என்றார்.