பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள ஹாசன் அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தில் லாரி புகுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 27 பேர் ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள மொசலே ஹொசஹள்ளி கிராமத்தினர் நேற்று முன் தினம் இரவு 9 மணியளவில் ஹாசன் தேசிய நெடுஞ்சாலையில் விநாயகர் சிலையை ஏற்றிக் கொண்டு ஊர்வலமாக சென்றனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பக்கம் சாலைகள் அடைக்கப்பட்டு, இன்னொரு பக்கத்தில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.
மொசலே ஹொசஹள்ளியை கடந்து விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சென்றபோது, எதிர் திசையில் ஹொலேநர்சிப்பூர் நோக்கி சென்ற வேன் சென்ட்டர் மீடியன் மீது ஏறி ஊர்வலத்தில் பங்கேற்ற மக்கள் மீது மோதியது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 2 பேர் மரணம் அடைந்தனர்.
இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த 27 பேர் ஹாசன் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உயிரிழந்த 9 பேரும் 35 வயதுகுட்பட்ட இளைஞர்கள் என்பதால் ஹாசன் மொசலே ஹொசஹள்ளி கிராமத்தினர் சோகமடைந்தனர்.
இதுகுறித்து ஹொலேநர்சிப்பூர் போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்துக்கு காரணமான வேன் ஓட்டுநர் புவனேஷ் குமாரை காயங்களுடன் கைது செய்து விசாரித்தனர். முதல்கட்ட விசாரணையில், வேன் வேகமாக இயக்கிய நிலையில் எதிரில் வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதுவதை தவிர்க்க ஓட்டுநர் முயற்சித்துள்ளார். அப்போது வேன் அவரது கட்டுப்பாட்டை இழந்து விநாயகர் சிலை ஊர்வலத்தில் புகுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
இந்த விபத்துக்கு பிரதமர் மோடி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, மத்திய அமைச்சர் எச்.டி. குமாரசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் சித்தராமையா, இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம், காயமடைந்தவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.