பெங்களூரு: கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை காரணமாக கர்நாடகா மாநிலம் தார்வாடில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல மழை காரணமாக உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைவிடாத மழை காரணமாக தார்வாடு மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், துணை ஆணையர் திவ்ய பிரபு ஜி.ஆர்.ஜே இன்று (ஜூன் 12, 2025) அங்கன்வாடிகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார்.
இருப்பினும், இரண்டாம் ஆண்டு பியூசியின் மூன்றாம் பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். ஹூப்ளி மற்றும் தார்வாடில் தலா மூன்று மையங்களிலும், குண்ட்கோல், கலகதகி மற்றும் அன்னிகேரியில் தலா ஒரு மையமும் உட்பட மாவட்டத்தில் ஒன்பது மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. அதேபோல பென்னிஹல்லா, துப்பரிஹல்லா மற்றும் மாவட்டத்தில் உள்ள பிற ஆறுகளின் கரையில் உள்ள கிராமங்களுக்கும் ஏற்கனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடைவிடாத மழையைக் கருத்தில் கொண்டு அதிகாரிகள் தங்கள் தலைமையகத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்று தார்வாடு துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும், மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவசர காலங்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள மாவட்ட நிர்வாகம் உதவி எண்ணையும் (0836-2445505, 1077) அறிவித்துள்ளது.
இதற்கிடையில், கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை காரணமாக, உத்தர கன்னடா மாவட்ட துணை ஆணையர் கே. லட்சுமிபிரியா இன்று (ஜூன்12) மாவட்டத்தின் கார்வார், அங்கோலா, கும்டா, ஹொன்னாவர் மற்றும் பட்கல் தாலுகாக்களில் உள்ள அங்கன்வாடிகள், தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார்.