பெங்களூரு: கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் மல்லிகார்ஜுன் (23). கடந்த 23-ம் தேதி பெங்களூருவில் இருந்து சித்ரதுர்கா திரும்பும்போது கார் விபத்தில் சிக்கிய அவர் தாவணகெரேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனையின் போது அவருக்கு எச்.ஐ.வி. தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனிடையே மல்லிகார்ஜுனின் உடல்நிலை சீராகாததால் அவரை உயர் சிகிச்சைக்காக பெங்களூரு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் கூறினர். இதனால் மல்லிகார்ஜுனின் தந்தை நாகராஜப்பா, தனது மகள் நிஷா (25) மற்றும் அவரது கணவர் மஞ்சுநாத்திடம் பெங்களூரு கொண்டு செல்லுமாறு கூறினார்.
இதையடுத்து நிஷாவும் மஞ்சுநாத்தும் மல்லிகார்ஜுனை கார் மூலம் பெங்களூரு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் பெங்களூரு செல்லும் வழியிலே இறந்து விட்டதாக உடலை ஜூலை 26-ம் தேதி ஊருக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் மல்லிகார்ஜுனின் கழுத்தில் காயம் இருப்பதை கண்டு சந்தேகமடைந்த அவரது தந்தை நாகராஜப்பா ஹொலேகெரே போலீஸில் புகார் அளித்தார்.
போலீஸார் இருவரிடமும் விசாரணை நடத்திய போது, ‘‘என் தம்பிக்கு எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட விஷயம் உறவினர்களுக்கு தெரிந்தால் அவமானமாக இருக்கும். விபத்தில் படுகாயம் அடைந்ததால் அவரை காப்பாற்ற நிறைய பணம் தேவைப்படும். குடும்ப மானத்தை காப்பாற்றுவதற்காகவும் பணப் பிரச்சினையை தீர்ப்பதற்காகவும் மல்லிகார்ஜுனை கழுத்தை நெறித்து கொலை செய்தோம்’’ என கூறியுள்ளனர்.
இதையடுத்து நிஷா, அவரது கணவர் மஞ்சுநாத் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இதனிடையே, எனது மகனை அவனுடன் பிறந்த அக்காவும் மாமாவும் சொத்துக்காக கொலை செய்துள்ளனர். இந்த கொலை எச்.ஐ.வி. காரணமாக நடக்கவில்லை என நாகராஜப்பா போலீஸில் புகார் அளித்துள்ளார்.